இந்த பதிவு எப்படியாவது பரிட்சையில் பெயிலாகி ஈன்ற தாயை பெருமைப்படுத்தி தந்தையின் வாயால் தண்டச்சோறு, தடிமாடு என்று புகலாரம் சூடும் உன்னத லட்சியம் கொண்டவர்களுக்காக.
இதற்கு இத்தனை மெனக்கெடுவானேன் பேசாமல் லீவு எடுக்க வேண்டியதுதானே என்று கேட்கும் முந்திரி கொட்டைகளுக்கு, எதை செய்யும் போதும் அதில் ஒரு சுவாரசியம் வேண்டும் அதுமட்டுமல்ல மற்றவர் கண்களுக்கு தெளிவாக நமது நோக்கம் தெரியக்கூடாது, விடைதாளை படிப்பவர்கள் இது விஷமமா அல்லது வடிகட்டிய முட்டாள்தனமா என்று குளம்ப வேண்டும்.
இந்த யோசனைகள் மிக கடினமானவை பாசாவதை விட இதற்கு அதிக உழைப்பை செலவிட வேண்டி வரும். யோசனைகளை பார்ப்போம்
1.)பரீட்சைக்கு முந்திய தினமே திட்டமிடல் தொடங்கிவிட வேண்டும். பள்ளி செல்வதற்கு உரிய பாதை எது என முடிவு செய்து விடவேண்டும், போகும் வழியில் எந்த பிள்ளையார் கோயிலும் இருக்க கூடாது. அவர் பாட்டுக்கு தெரியாத்தனமாக நமக்கு அருள் பாலித்து தாயின் கனவை கலைத்துவிட்டால். அம்மாவிடம் சொல்லி ஆரத்தி எடுத்து நெற்றியில் அரை இன்ச் நீள வீர திலகம் இட்டு தந்தை துடைத்து வைத்த சைக்கிள் எடுத்துக்கொண்டு கிளம்பவும்.
2.)விடைத்தாள் வாங்கிய உடன் முதலில் செய்ய வேண்டியது அய்யனார் துணை என்று எழுதி அரை பக்க அளவிற்கு அரிவாள் படம் வரையவும்.
3.)அடிக்கோடு மற்றும் ஹைலைட் செய்யும் பென்சில், ஸ்கேட்ச் போன்ற தேவையற்ற சாதனங்களை தூக்கி கிடாசவும். பக்கத்து டேபிளில் கூட யாரும் வைத்திருக்க விடக்கூடாது.
4.)இரப்பர் உபயோகபடுத்தக்கூடாது பேனா கொண்டு ஒருமுறைக்கு நான்கு முறை அடித்து திருத்தவும். பரீட்சை முடிய பத்து நிமிடம் இருக்கும் போது பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை விதம் அடித்து விடவும்.
5.)முடிந்த அளவு கையெழுத்து மோசமாக இருக்க வேண்டும், முடிந்தால் இடது கையில் எழுதவும்.
6.)அதிகமாக பயன்படுத்தும் ‘த்’, ‘ம்’, ’ன்’ அல்லது ‘a’, ‘e’, ‘i’ போன்ற ஏதாவது மூன்று எழுத்துக்களை தவிர்க்கவும்.
7.)சொற்றொடர் அமைக்கும் முறையில் சிறிது நவீன உக்திகளை கையாளவும்.
உதாரணமாக,
‘நாய் குரைத்தார்’ அல்லது ‘கொசு கடித்தார்’
(யாராவது கேட்டால் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கமாறு அப்பா சொன்னதை சொல்லவும்)
8.)இயல்பாக நடக்கும் விஷயங்களை சிறிது சுவாரசியமாக சொல்ல வேண்டும், எதுகை மோனை உடன் சிறிது மிகைப்படுத்தவும்.
உதாரணமாக,
‘நாய்கள் நடனமாடும் நடுநிசி நேரம்’
‘பசியில் பறந்த பன்றியை போல’
(முந்தய நாள் இரவு டி.ஆர் படம் பார்ப்பது உதவும்)
9.)பின்னால் வரப்போகும் பிரசனைகளை சந்திக்கும்போது ஒரு நண்பன் உடனிருந்தால் மிக சிறப்பு. படம் வரைந்து பாகங்களை குறித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். கொடுக்காபுலி கொண்டு வந்து ஒளித்து வைத்து தின்ற ஆருயிர் நண்பன் கோவால் இதற்கு கைகொடுப்பான். கோவால் கொடுத்த பிட்டில் படம் இல்லை என்ற குறிப்பு எழுதிவிடவும், மற்றவை தானாக நடக்கும்.
10)பக்கங்களுக்கு நம்பர் இட வேண்டாம், விடைத்தாளை கட்டுவதற்கு முன்னாள் பக்கங்களின் வரிசையை மாற்றிவிடவும்.
இதற்க்கு மேலும் பாசாகி தொலைத்துவிட்டால் மனம் தளரக் கூடாது. மைண்ட் வாய்ஸில் ஊமை விழிகள் படத்தில் வரும்
“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ முடியுமா”
ஓடவிட்டுக் கொண்டு ஒரு வெறியோடு வீறுகொண்டு எழுவது போல ஒரு எஃபக்ட் உடன் பத்து முறை உட்கார்ந்து எந்திரிக்கவும், இது அடுத்த பரீட்சைக்கு தயாராக உத்வேகம் கொடுக்கும்.