Monday, December 8, 2014

பஸ் பயணத்தின் போது பொழுது போக பத்து யோசனைகள் - பகுதி II






இதன் முதல் பாகம் கீழ்கண்ட பதிவில் உள்ளது, முதலில் அதை படித்துவிட்டு வரவும்.

1.) முதல் பாகத்தில் பக்கத்து இருக்கை அன்பரை அம்போ என விட்டு வந்தோம் அல்லவா? அவர் பேருந்து கிளம்பும் கடைசி நிமிடம் வரை உங்களை காணாமல் பதறி தேடி, ஓட்டுனரிடம் கதறி வண்டியை நிறுத்துவார். இந்த களேபரத்தை கண்டு இரசித்துவிட்டு ஓடிச் சென்று வண்டியில் ஏறவும். உங்களை கண்டவுடன் அப்பாடி என்று பெருமூச்சு விடுவார், ஏனைய பயணிகள் எரிச்சலுடன் நம்மை பார்ப்பார்கள். அவர்களுக்கு தெரியாது இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்று.


2.) முதலில் நடத்துனரிடம் இருந்து ஆரம்பிக்கலாம். சில்லறை கொடுக்கவில்லை என்று யாரையாவது திட்டிக் கொண்டு வரும் நடத்துனரிடம், நூறு ரூபாய் பயண கட்டணத்திற்கு ஐந்து ரூபாய் காசுகளாக கொடுத்துவிட்டு, அவர் முகபாவனைகளை கண்டு ரசிக்கவும். அவர் ஏதாவது கேட்டால், ஊருக்கு செல்வதற்கு பணம் இல்லாமல் அக்காவின் திருமண செலவிற்காக சேர்த்து வைத்த உண்டியலை உடைத்த கதையை "பலாக்கா கலாக்கா" (பழைய பாக்யராஜ் படங்களை பார்ப்பது இதற்காக தான்) என்று எதுகை மோனையில் சொல்லவும். 

3.)     வண்டி எடுத்து இருபது நிமிடங்கள் கழித்து அனைவரும் மெல்ல துயிலில் ஆழ்கையில் உங்கள் பிரியாணி பொட்டலத்தை திறக்கவும். உடன் பேருந்தில் உள்ள மொத்த பயணிகளும் "உடுக்கை இழந்தவன் கை போல" பதறி திரும்புவர், இந்த வினாடியில் இருந்து அவர்களின் ஒட்டு மொத்த கவனமும் பேருந்தில் இருந்து இறங்கும் வரை உங்களிடம் இருந்து விலகக் கூடாது. (பாதி மட்டும் சாப்பிடவும், மீதியை பிறகு சாப்பிடலாம்).

4.) பேருந்தில் எதாவது திரைப்படம்  ஓடிக் கொண்டிருக்கும். அதனை மிக சத்தமாக ரசிக்க தொடங்கவும். ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னர் வந்த படங்களில், காட்சிக்கு சம்மந்தமே இல்லாத பெரியவர் ஒருவர் வந்து பேசும் "இத தட்டி கேட்க ஒருத்தருமே இல்லையா", "இனிமேல் இந்த நாட்ட நீங்க தான் காப்பாத்தனும்" , "இப்படியே மசமசன்னு நிக்காம போய் ஆக வேண்டிய வேலைய பாருங்க", "அவரு வாய் பேசாது அவரு கை தான் பேசும்" போன்ற வசனங்களை சொல்லவும். (காட்சிக்கு தகுந்தவாறு வசனம் முடியும் போது "ட்டடண்டன்டன் ட்டடண்டன்டன்" என்று பின்னணி இசையும் கொடுக்கலாம்). திரைப்படத்தை பார்ப்பவர்களை விட உங்களை பார்ப்பவர்கள் அதிகமாக இருக்க வேண்டும்.

5.) எதாவது பேருந்து நிறுத்தம் வந்தவுடன் பக்கத்து இருக்கை அன்பரை தாண்டி ஜன்னல் வழியாக தலையை நீட்டி "கல்லக்கா கல்லக்கா" அல்லது "கொய்யாக்கா கொய்யாக்கா" என்று சத்தமாக அழைக்கவும். விற்பவர் அருகில் வந்தவுடன், அவர் பத்து ரூபாய்க்கு மூன்று என்றால் நீங்கள் மூன்று பத்து ருபாய் என்ற ரீதியில் பேரம் பேசவும், ஆனால் எதுவும் வாங்க வேண்டாம் "போப்பா நான் பிரியாணி சாப்பிட்டு கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு மீதம் வைத்த பிரியாணி பொட்டலத்தை பிரிக்கவும். இப்பொழுது சகபயணிகளின் முகபாவனைகள் போன்ற ஒன்று காணக்கிடைக்காது.

6.) சாப்பிட்ட பின், தூங்குவது போல பாசாங்கு செய்ய தொடங்கவும். மெல்ல சரிந்து கொண்டே வந்து அருகில் அமர்ந்திருக்கும் அன்பரின் தோளில் சாய்ந்து விழவும். அவரும் உங்களின் தூக்கம் கெடக்கூடாது என்று மெல்ல தலையை அகற்றுவார். உடன் அவர் மீது கையை போடவும், கையை எடுத்து விட்டவுடன் காலை போடவும். அப்பவும் சண்டை தொடங்கவில்லை என்றால் அந்த குறுகிய இடத்தில் எப்படியாவது உடலை அஷ்ட கோணலாக்கி அவர் மீது உருண்டு படுக்கவும். உங்களுடைய குறிக்கோள் என்னவெனில், அவர் தன்னையே ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்தி அவரின் இயல்பை மீறி கோபத்தில் கொப்பளிக்க வேண்டும், அதில் நாம் குளிர் காய வேண்டும்.

7.) நீங்கள் ஆண் என்றால் குயில் பாட்டு சித்ரா அவர்களின் பாடல்களை பெண் குரலில் உச்ச ஸ்தாயியில் பாடவும். நீங்கள் பெண் எனில் "BANG BANG BANG ராஜு பாய் வந்தாலே" என்று சுற்றிலும் உள்ளவர்களை விரல்களால் சுடுவது போன்ற செய்கை செய்து கொண்டே பாடவும். பாடும் பொழுது கண்களில் கனல் தெறிப்பது அவசியம், அது மற்றவர்களை குழப்ப உதவும்.

8.) சாப்பிட்ட பிரியாணியின் மெய்யான பயன் தொடங்கும் நேரம் ஆகியிருக்கும். இதற்கு தங்களின் எந்த முயற்சியும் இல்லாமல் அடி வயிற்றில் ஒரு ஆக்ரோஷ பிரளயம் நடந்து அதன் விளைவானது வெளியே ஆர்ப்பரித்து காற்றை கிழிக்கும். இது வரை நடந்தவைகளை கண்டபிறகும் தூங்கும் அதிதீரர்கள் கூட இதன் பின் எழுந்து விடுவர்.

9.) நன்றாக நாக்கை நான்கு அங்குலம் வெளியே நீட்டி மடித்து பற்களால் கடிக்கவும். கண்களை நன்றாக அகல விரித்து கொண்டு, அடி வயிற்றில் இருந்து "இம்மம்ம்ம் டேய் உன்ன சும்மா விட மாட்டேன்டா" என்று விட்டத்தை பார்த்து தொடர்ந்து கத்தவும். 

இதற்குள் "ஏம்பா இப்படி எல்லாரையும் தொல்ல பண்ற" என்று எதாவது ஒரு தைரியசாலி கேட்பார். துணைக்கு ஒருவன் இருந்தால் வெறும் தமிழன் பொங்கு தமிழன் ஆகி விடுவான். இதற்கெனவே காத்திருந்தது போல மற்றவர்கள் குரலும் உயர தொடங்கும். இதுதான் நாம் பேருந்தில் இருந்து இறங்கும் தருவாய் வந்து விட்டது என்பதன் அறிகுறி.

10.)  அவசர அவசரமாக இறங்க வேண்டாம். நாம் இந்த பயணத்திற்காக மிகுந்த சிரத்தை எடுத்துள்ளோம். எழுந்து நின்று நமக்கு தொலைவில் உள்ள கதவையும் அதை அடையும் பாதையில் உள்ள கால்களையும் கண நேரத்தில் நோக்கில் நிறுத்தவும் (பிரபுவிடம் எடுத்த பயிற்சியை நினைவில் கூறவும்).

"வண்டிய நிறுத்துங்க" என்று கதறி கொண்டு ஓட வேண்டும், செல்லும் வழியில் உள்ள ஒரு கால் கூட தவறாமல் மிதி பட வேண்டும். அனைவரும் சுதாரிப்பதற்குள் இறங்கி புயல் வேகத்தில் ஓட வேண்டும்.

Tuesday, November 25, 2014

பஸ் பயணத்தின் போது பொழுது போக பத்து யோசனைகள் - பகுதி I


         
        புத்தகம் படிப்பது, ஐபாடில் பாட்டு கேட்பது போன்ற மட்டமான யோசனைகளை இதில் எதிர்பார்க்காதீர்கள். இதில் வரும் யோசனைகள் சக மனிதனுக்கு மரியாதை கொடுப்பது, நல்லொழுக்கமுடன் திகழ்வது போன்ற கொள்கைகளை உடைய சராசரி மனிதர்களுக்கு அல்ல. எப்பவும் எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். இந்த பதிவில் பேருந்து பயணத்தின் பொழுது நான் சந்தித்த மனிதர்களின் தாக்கம் இருக்கும். இந்த பயணம் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கோ அல்லது வேண்டிய இடத்தை அடைவதற்கோ அல்ல, இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே.

         இது ஒரு கடினமான பாதை. இதில் காலடி எடுத்து வைக்க மிக்க தைரியம் வேண்டும். இந்த பயணத்திற்கு முன் உடல், உயிர் மற்றும் ஆன்மா அனைத்தையும் உருக்கி ஊற்றி வேள்வி செய்வது போல தயாராக வேண்டும். 

பயணத்திற்கு தயார் ஆவதற்கு பத்து வழிமுறைகள்

1) முதல் காரியமாக இன்சூரன்ஸ், உயில் மற்ற இத்யாதிகளை தயார் செய்து விடவும். 

2) ஆறு மாதத்திற்கு முன்பே உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும், நமது நேரம் மோசமாக இருந்து தொலைத்தால் அடி வாங்க உடம்பில் தெம்பு வேண்டும் அல்லவா!!!

3) ஏதாவது ஒரு கோயில் வாசலில் உள்ள பிச்சைக்காரர் வசமிருந்து ஐந்நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் காசுகளாக சில்லறை மாற்றி கொள்ளவும். பணப் பற்றாக்குறை எனில் அவரிடம் வட்டிக்கு கடன் வாங்கலாம்.

4) நான்கு நாட்கள் முன்பே ரோட்டு கடையில் பிரியாணி வாங்கி வைத்துக் கொள்ளவும்.

5) இராணுவத்தில் பயன்படுத்தப்படும் முரட்டுக் காலனி ஒரு ஜோடி வாங்கவும்.

6) மஞ்சப்பை - இப்பொழுது எந்த துணி கடையிலும் மஞ்சப்பை தருவது இல்லை. வீட்டுப் பரணில் இல்லை என்றால் ஈரோடு சென்று ஆர்டர் செய்து வாங்கி வர வேண்டும். ("நகைக் கடையில் மங்களகரமாக இன்னும் மஞ்சப்பை தருகிறார்களே?" என்று கேட்கும் ப்ரகஸ்பதிகளுக்கு - நாம் பஸ் ஏறும் போது ஏழை பட்டிக்காட்டான் போல தெரிய வேண்டும். அதற்கு நகைக்கடை பை உதவாது)

7) மரியாதை என்னும் துண்டையும், மானம் என்னும் சட்டையையும் கழற்றி வீட்டு ஆணியில் மாட்டி விட்டு வரவும். அது இந்த பயணத்திற்கு தேவை இல்லை.


8) மிக முக்கியம், பயணத்தின் போது உறங்கிவிட கூடாது. அதற்காக முந்தைய நாள் இரவு நன்றாக உறங்க வேண்டும். இரவு பயணமெனின் விடுப்பு எடுத்து கொண்டு மதியம் உறங்கலாம் (வேலை போனாலும் கொண்ட கொள்கை மாறலாகாது). 

9.) பழைய பாக்யராஜ் படங்களை பார்த்து அதில் வரும் வசனங்களை கற்கவும், முடிந்தால் "The Art of Acting" by Stella Adler வாங்கி படிக்கவும். பில்லா முதல் பாகத்தில் பிரபு அவர்கள் அஜீத்திற்கு பயிற்சி கொடுக்கும் காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்கவும்.

10.) பேருந்து கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக பேருந்து நிலையத்திற்கு செல்லவும். பறக்கா வெட்டி போல பேருந்தை பார்த்தவுடன் ஓடிச் சென்று ஜன்னல் சீட் பிடிக்க வேண்டாம். கண் கொத்தி பாம்பாக பேருந்து ஏற வருபவர்களை கவனிக்கவும். நமது காரியத்திற்கு ஏற்றவாறு சிரித்த முகமாக யாராவது வருகிறார்களா என்று கவனிக்கவும், ஒற்றை நாடியாக இருந்தால் கூடுதல் வசதி. நமக்கு வாகாக ஒருவர் சிக்கியவுடன் உடனே முன்னாள் நிற்பவர்களை இடித்து தள்ளி கொண்டு, அவர் பின்னால் சென்று பக்கத்து இருக்கையில் மஞ்சப்பை போடவும். அவரிடம் மிகவும் மரியாதையாக, "நான் கழிப்பிடம் செல்கின்றேன் இருக்கையை பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு, இறங்கி வந்து பக்கத்து பெட்டிக் கடையில் மறைவாக நின்று தம் வாங்கி அடிக்கவும் (பழக்கம் இல்லை என்றால் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே பழகிக் கொள்ளவும்). 

தயார் ஆவதை படித்தே தலை சுற்றி இருக்கும். இனி பேருந்தில் ஏறிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

பஸ் பயணத்தின் போது பொழுது போக பத்து யோசனைகள் - பகுதி II