Monday, August 22, 2011

காதலும் இதர வியாதிகளும்: Part I


இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, நான் சந்தித்த மனிதர்களின் சாரல் இதில் இருக்கலாம் ஆனால் இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதபடவில்லை.

 
எப்பவும் போல ஒரு கரண்ட் கட் வேளையில் மல்லாக்க படுத்து கொண்டு ஓடாத டி‌வியை வெறித்து பார்த்து கொண்டு இருந்தேன். என்னுடன் அறையை பகிர்ந்த நண்பன் (கேட்டு கொண்டதற்கிணங்க பெயர் நீக்கப்பட்டது) பக்கத்து கட்டிலில் படுத்து கொண்டு துணைக்கு அதே டிவியை வெறித்து கொண்டு இருந்தான். இன்றைக்கு என்று பார்த்து மூளை குறுகுறுவென வேலை செய்து தொலைத்து சே ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தா இந்நேரம் எங்கயாச்சு போய் ஊரை சுத்திகிட்டு இருந்திருக்கலாம் என்று புலம்பினான். எனது ஜாதகத்தில் உச்சத்தில் இருந்த சனி பகவான் அவன் நாவில் வந்து அமர்த்து கொண்டதை நான் அறியவில்லை.

முந்தய இரவு முழுவதும் அவன் சொன்னதை பற்றி யோசித்து கொண்டு இருந்த காரணத்தாலும் எனது ஜாதக கட்டங்கள் உந்தி தள்ளிய காரணத்தாலும் நேராக ஆபிஸ் ஜாக் ராஜூவின் முன்னாள் போய் நின்றேன். ராஜூவை பற்றிய ஒரு முன்கதை சுருக்கம் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும், என்னை போன்ற பேக்குகளுக்கு பெண்கள் விஷயத்தில் ஐடியா கொடுப்பதற்காகவே அவதரித்த ஆபத்பாந்தவன். பான் பராக் போட்டு துப்பிய எச்சில் நிறத்தில் தலைச்சாயம், பகுட்டில் பல்லி வால் போன்ற மெல்லிய தாடி, ஒற்றை நாடி உருவம், நல்ல சிகப்பு, தமிழ் சினிமாவில் ஹீரோவின் தங்கையை காதலித்து  கரெக்ட் செய்யும் வில்லனின் தம்பி கேரக்டர் போல இருப்பான். ரொம்ப நாளாக ஆபிஸ் வேலை எதையும் செய்யாமல் சினிமா சான்ஸ் தேடி கொண்டு இருப்பவன், தாய்மார்கள் அனைவருக்கும் முன்பே அறிமுகமானவன், டூ விட்ட தங்கச்சி சீரியலில் கடந்த பத்து வாரங்களாக ஹீரோவின் தங்கையை இழுத்து கொண்டு ஓடிக்கொண்டிருப்பது சாட்சாத் நம்ம ராஜு தான். அவனை அழைத்து சென்று டீ வாங்கி கொடுத்து எனது பிரச்சனையை விளக்கினேன்.

ராஜூவின் யோசனையை எல்லோரும் நாடி போக காரணம் அவனது தெளிவான அணுகுமுறை. எந்த அளவு தெளிவு என்றால், எந்த ஒரு விஷயத்தையும் ஒரு கணித கேள்வியை தீர்வு செய்வது போன்று சமன்பாடுகளுடன் விளக்குவான்.

ஒரு சின்ன காகிதத்தில் எனது வாழ்க்கை பாதையை 12B படத்தில் வருவது போல பின்வருமாறு விவரித்தான்.

IDEA I
            நீ         +    உஷா = கனவில் கூட நடக்காது
    (ஹைட் கம்மி,     (அரேபிய குதிரை
      வீக் பாடி,              போன்ற உடல்வாகு,
    மாநிறம், சுமார்)   சுண்டினால் சிவக்கும் நிறம்)


இவன் எனது நண்பன் தானா என்ற யோசனை வந்தது அதற்க்குள் என்னை பேச விடாமல் அடுத்த யோசனைக்கு தாவிவிட்டான்.

IDEA II
           நீ         +    ஆர்த்தி      +   X  = நடக்கலாம்
     (ஹைட் கம்மி,    (வசீகரமான கண்கள்
      வீக் பாடி,               லட்சணமான முகம்,
     மாநிறம், சுமார்)     சிகப்பு)


இதில் X  ஒரு CATALYST அதன் முழு விவரம் இந்த பதிவில் அடங்காத காரணத்தால் முக்கிய புள்ளிகள் மட்டும் கீழ்வருமாறு

1.)     ஆறு மாத கடுமையான உடற்பயிற்சி
2.)     தெலுங்கு பட நாயகன் போல அடிக்கும் நிறத்தில் உடைகள்
3.)     SANTRO அல்லது I10
4.)     கூர்முனை தலைமயிர்(spike)

அவனிடம் நான் ஒரு பிறவி சோம்பேறி என்பதையும் எனது நிறத்திற்க்கு சிகப்பு சட்டை மற்றும் spike பொருத்தமாக இராது என்பதை மிக பொறுமையாக விளக்கி அடுத்த ஆலோசனைக்கு செல்லுமாறு கூறினேன்.

IDEA III
           நீ         +    வாணி         = உடனே காதல்
     (ஹைட் கம்மி,    (நவ நாகரீக உடை,
      வீக் பாடி,              ஒற்றைநாடி உருவம்,
     மாநிறம், சுமார்)   மாநிறம், சுமார்)

நான் தயக்கத்தோடு யோசிப்பதை பார்த்துவிட்டு மீண்டும் எனது குறைகளை அடுக்கி நீண்ட பட்டியல் போட்டு என்னை கடுப்பேற்றினான். நான் முறைப்பதை பார்த்துவிட்டு நிலவரத்தை விளக்கினான், வாணி தற்சமயம் அவளது முந்தய பாய் ஃப்ரெண்ட் உடன் இருந்து பிரிந்து விட்டதால் வேறு யாரும் முந்தி கொள்வதற்க்கு முன்னாள் நான் களமிறங்கும் அவசியத்தை எடுத்து கூறியதோடு அன்றி என்னை தரதரவென இழுத்து சென்று அவளிடம் அறிமுகம் செய்தான். அவளும் ரொம்ப நாள் பழகியது போல சகஜமாக காபி சாப்பிட அழைத்தாள், நானும் பின்னால் வரும் இடியாப்ப சிக்கல்களை உணராமல் கிளம்பினேன்.

                                                       - தொடரும் 

Wednesday, August 10, 2011

தூக்கத்தில் தேடுகிறேன்



உளறல் போல இருந்தது !!


கனவுகள் இல்லா பின்னிரவில்
எதுவும் நிகழவில்லை

எனக்குள் நான் பேசிய ஒலியில்
விழிக்கிறேன்

உளறல் போல இருந்தது

வருமொன்று  ஆகியும்
வலியினுள்ளே தொட்ட
விரலில் ஈரம்

தெரிந்த இடத்தில்
தொலைந்த நண்பன்

கால்புதையும் கடற்கரையில்
கரைந்த கனவுகள்

பாதி கண்களை மூடி யோசித்தேன்

விண்மீன் பக்க காற்றில்
சுவாசம் எப்படி ?

கேட்டிராத வான்மொழி கேள்விகளின்
நிழலில் ஒளிந்திருக்கலாமோ ?

சாய்ந்த மரமொன்றின் சருகுகள்
மீது நடந்தேன்

தள்ளி கேட்கும் காலடித்தடத்தின்
எதிரொலியாக இருக்குமோ ?

அருவமான அழகிகளின் முடிவில்லா
முத்தங்களிலா ?

தெரியாத இடைவெளி உந்தி
தள்ளி விட்டது

உள்ளுயிற்புடன் திரும்பி நடந்தேன்
கால்தட்டியது வாழ்க்கை

விதிர்த்து வீழ்ந்து கண்விழித்தேன்

காலநேரமின்றி கதையடிக்க பக்கத்தில்
இடம் போட்டு வைத்திருப்பான்

தள்ளி செல்லுங்கள் திரும்ப தூக்கத்தில்
தேடி பார்க்க வேண்டும்

உயிரினிசை ஒலிக்கும் வரை
தேடல் தொடரும் ...

                                    சிவா

Tuesday, August 9, 2011

Devil's English -Tamil Dictionary - Alphabet B

BABY
(நபருக்கு நபர் மாறுபடும்)  சர்வ ஜாக்கிரதையாக கையாள வேண்டிய கொடிய மிருகம், நமது மனதை படித்து பின்னர் அதை நமக்கு எதிராக பயன்படுத்த வல்லது, சதா ஓலமிட்டு தூக்கத்தை கெடுக்கும் ஜந்து, யாராவது தூக்கும் வரை காத்திருந்து அவர்கள் மேல் சிறுநீர் கழிக்கும் துஷ்டன்/துஷ்டி, ஆதாரம், விபத்து.
BACHELOR
வாடகைக்கு வீடு கிடைக்காத அப்பாவிகள்.
BANKRUPT
மனைவியின் வங்கி கணக்கில் சேமிப்பு/இருப்பு செய்யும் பெண்ணுரிமை போற்றும் புரட்சி சிந்தனை கொண்டவர்.
BAR
புதிய சிந்தனைகள் உருவாகும் உலை களம், வாள்கள் தீட்டப்படும் பட்டறை, சமுதாயத்தை வழி நடத்தும் சமச்சீர் கல்விசாலை
BARTENDER
நேரம் ஆகிறது வீட்டுக்கு போங்க என்று அக்கறையோடு சொல்லும் நண்பர்.
BATH
நாம் செய்யாதது
BATHROOM
நமக்கு தேவையில்லாதது
BEAUTY PARLOUR
வாழ்க்கை முழுவதும் முயன்றும் மாற்ற முடியாத முகத்தை மூன்று மாத பயிற்சி முடித்தவரிடம் மாற்ற சொல்லி ஒப்படைக்கும் இடம்
BELT
தொப்பையை பிதுக்கி மலச்சிக்கல் போக்கும் கட்டு, புனிதமான மாடுகளின் தோலில் தயாரிக்கப்படுவது, இதை மிக அழுத்தமாக அணிந்திருப்பவரின் பின்னால் நிற்பதை தவிர்க்கவும் மிக வேகமாக காற்றை பிரிக்கும் வல்லமை கொண்டவர்கள்.
BEER
இன்றய இளைஞர்களின் இளந்தொந்தி இரகசியம்.
BEGGAR
புரட்சிகரமான பொருளாதார கொள்கையால் பணமுறை சுதந்திரம் அடைந்தவர்
BIGAMIST
திரும்ப திரும்ப அதே தப்பை செய்யும் முட்டாள்
BLACKGUARD
கருப்பான செக்யூரிட்டி
BORE/BLADE
இவ்வளவு கஷ்டப்பட்டு உசுர குடுத்து பதிவு போடுற நான்தான் ஸார்
BRAIN
நமக்கு இல்லாதது
BRIDE
ஆட்டை வெட்டுபவர் அல்லது புதிதாக அடிமை வாங்கியவர்.
BRIDEGROOM
பலிகடா அல்லது அடிமை சந்தையில் விற்கபடும் நபர்.
BROKER
நம்மிடம் பணம் பெற்று கொண்டு நம் வாழ்வை நாசமாக்கும் மோசதாரி, இப்பத்த ரேட் வரதட்சணையில் 10% , நீங்க வரதட்சணை வாங்கவில்லை என்றால் உங்களுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாண பிராப்தம் இல்லை
BUDGET
நாம் கடன் வாங்கியவர் முகவரி மற்றும் அவர்களிடம் மாட்டி கொள்ளாமல் பயணம் செய்ய வழிகாட்டும் வரைபடம்.
BUFFET
ஃபுல் மீல்ஸ் அல்லது அன்லிமிடெட் மீல்ஸ்
BUSY
(நபருக்கு நபர் மாறுபடும்) முதலாளி வரும் பொழுது தொழிலாளி இந்த நிலையில் இருப்பார், சாக்கு, இளுத்தடிப்பது, தொடங்கிய வேலையை முடிக்க முடியாமல் முழிக்கும் கையாலாகாத்தனம்.
BUSINESS
மேற்கூறிய தொழிலாளியை வைத்து வேலை வாங்கி நாசமாய் போக விந்தையான ஒரு யுக்தி.

Tuesday, August 2, 2011

TIME TRAVEL சாத்தியமா - PART IV (PARADOXES)

இந்த பகுதி டைம் டிராவல் செய்ய முடிந்தால் அதனால் என்ன முரண்பாடுகள் எழலாம் என்பது பற்றிய ஒரு பார்வை.


  1. நான் டைம் மெஷினில் ஏறி எண்பது வருடம் பின்னாள் போய் என் தாத்தாவை தேடி கண்டுபிடித்து கொலை செய்தால் என்னவாகும். (அவர நான் பார்தது கூட கிடையாது எங்க அப்பா பிறந்ததுக்கு காரணம்கிற ஒன்ன தவிர எனக்கும் அவருக்கும் எந்த பிச்சினையும் கிடையாது !!!)
  2. இருபது வருடம் பின்னாள் போய் இளைய உங்களை பார்த்து நீச்சல் தெரிந்திருப்பதின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி கற்றுக்கொள்ள சொல்கிறீர்கள். அதை கேட்டு உங்களின் இளவயது பிரதி நீச்சல் கற்றுக்கொள்கிறான். அவனுக்கு பத்து வருடம் கழித்து டைம் மெஷின் கிடைத்தாலும் டைம் டிராவல் பண்ணி போய் நீச்சல் பற்றி சொல்லணும் என்கிற அவசியம் இல்லை ஏனெனில் உங்களுக்கு தான் நீச்சல் முன்பே தெரியுமே. (அப்படி நீங்க சொல்லாட்டி உங்ககிட்ட பத்து வருஷம் முன்னாடி நீச்சல் கத்துக்க சொன்னது யாரு!!! அப்படி யாருமே சொல்லாட்டி நீங்க ஏன் நீச்சல் கத்துகிட்டீங்க!!! உங்களுக்கு நீச்சல் தெரியுமா தெரியாதா ?!!! )
  3. நீங்கள் பத்து வருடம் பின்னாள் போய் உங்களிடம் நீங்களே ஆயிரம் ருபாய் கொடுத்து நீச்சல் பழகிக்கொள் என பணித்து திரும்பி நிகல் காலத்திற்க்கு வந்து கிணற்றில் குதிக்கறிர்கள். (ஆனா அந்த விளங்காத பய -அட உங்கள தான் ஆயிரம் ருபாய வாங்கிட்டு நேரா சரக்கு அடிக்க போயிட்டா??? வேற என்ன சங்கு தான் ஊஉ......... !!!!!!!!!)
  4. நமது அன்பு தோழர் ஆனந்த் முதல் பகுதியில் கிணற்றை காணவில்லை டைம் டிராவல் செய்து கண்டுபிடித்து தருமாறு பின்னூட்டு செய்து இருந்தார். ஒரு உதாரணத்திற்கு அவர் கிணற்றை தேடி டைம் டிராவல் செய்து கடந்த காலத்திற்கு போய் சரியாக கிணறு இருந்த இடத்திலேயே இறங்கினால் என்ன ஆகும் (முந்தய பத்தியில் கடைசி வரியை படிக்கவும்).
  5. இருப்பதிலேயே குழப்பமான முரண்பாடு இதுதான் கூர்ந்து கவனிக்கவும். நீங்கள் ஐந்து நிமிடம் எதிர்காலத்திற்கு பயணம் செய்து உங்களின் எதிர்கால உருவத்தின் மூக்கின் மேல் ஓங்கி குத்துகிறீர்கள். உடன் உங்களின் எதிர்கால பிம்பம் நிகல்கால உங்களை பதிலுக்கு குத்துகின்றது. இந்த செயல்கள் நடப்பதற்க்கு ஐந்து நிமிடம் ஆகின்றது, முதல் வரியின் படி கடந்தகாலத்தில் இருந்து நீங்கள் டைம் டிராவல் செய்து வந்து நிகல்கால உங்களை குத்துகிறீர்கள், உடன் கடந்த கால நீங்கள் நிகல்காலத்தை பதிலுக்கு குத்துகிறீர்கள். வலியில் கண்ணை மூடி திறந்து பார்த்தால் எதிரில் குத்துவதற்க்கு தயாராக நீங்கள் நின்று கொண்டு உள்ளிர்கள், மறுபிடியும் ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. இதன் முடிவு தான் என்ன (குத்து வாங்கி வாங்கி உடம்பில் உள்ள தக்காளி சட்னி எல்லாம் சிந்தி , முந்தய பத்திக்கு முந்தய பத்தியில் கடைசி வரியை படிக்கவும்).
  6. டைம் டிராவல் செய்வதில் முக்கியமான அம்சம் ஒளியின் வேகத்தில் செல்வது. ஒளி வேகத்தில் செல்வது மனித மூளை மற்றும் கண்களால் உணர முடியாத அளவு. ஏதேனும் ஒரு திட பொருள் நாம் செல்லும் பாதையில் இருந்தால் ( ஆத்தா ஒளி வேகத்துல போறேன் யாரும் குறுக்க வராம நீதான் பாத்துக்கணும் அப்படின்னு வேண்டிட்டு புறப்பட வேண்டியது தான், மீறி யாராவது குறுக்க வந்தா வேற என்ன முந்தய பத்திக்கு முந்தய பத்திக்கு முந்தய பத்தியில் கடைசி வரியை படிக்கவும்).
  7. எண்களை குளறுபடியாக உள்ளீடு செய்து டைம் மெஷின் தவறாக உயிரின் மூலம் ஜனித்த காலத்திற்க்கு முன் சென்று விட்டால் என்னவாகும் (முந்தய பத்திக்கு முந்தய பத்திக்கு முந்தய பத்திக்கு முந்தய பத்தியில் கடைசி வரியை படிக்கவும்).
  8. எதிர்காலம் என்பது நாம் தீர்மானிப்பது, இன்னும் நிகலாத ஒன்று. அறிவியலின் படி விதி என்று ஒன்று இல்லாவிடில் இன்னும் நடக்கவே இல்லாத ஒரு செயலுக்கு எப்படி செல்வது.
 
இந்த முரண்பாடுகளுக்கு பதில் CHAOS மற்றும் ANTHROPIC கோட்பாடுகளை கலந்து யோசித்து பார்த்தால் நீங்கள் கடந்த காலத்திற்க்கு சென்று உங்கள் தாத்தாவை கொல்வது ஏற்கனவே முடிவான ஒன்று. ஆனால் உங்களுக்கு தெரியாத விஷயம் உமது பெற்றோர் உம்மை பொள்ளாச்சி சந்தையில் தவிடிற்க்கு வாங்கியது, உங்களுடைய தாத்தா உண்மையில் உங்கள் தாத்தவே இல்லை.


இன்னொரு பதில் நீங்கள் உங்கள் தாத்தாவை கொல்லும் பொழுது ஒரு PARALLEL UNIVERSE உருவாகிவிடும். ஒரு பரிமாணத்தில் நீங்கள் இருப்பீர்கள் இன்னொன்றில் நீங்கள் பிறக்கவே போவது இல்லை. ஏனெனில் அந்த பரிமாணத்தில் உள்ள உங்கள் தாத்தாவை கொன்றுவிட்டீர்கள்.


இன்னும் பல பதில்கள் இருந்தாலும் சரியான ஒன்றை காலம் தான் சொல்லும். அதுவரை டைம் டிராவல் செய்ய முடிந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று கற்பனை குதிரையை தட்டி விடலாம்.
           
                        - முற்றும் -


Tuesday, July 26, 2011

TIME TRAVEL சாத்தியமா - PART III (WORMHOLE)



முன்கதை சுருக்கம்:

TIME TRAVEL சாத்தியமா - PART II (SPACETIME CONTINUUM)

ஐன்ஸ்டீன் தனது SPECIAL RELATIVITY – 1905 SPACE மற்றும் TIME ரெண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைஞ்ச ரப்பர் சீட். ரெண்டு பொருட்கள் RELATIVE MOTION ல இருக்கும் போது அந்த ரப்பர் சீட் இழுக்கப்படுது.


GENERAL RELATIVITY (1916)
அந்த ரப்பர் சீட் மேல ஒரு கனமான உருண்டைய போட்டா அது சீட் கொஞ்சம் இழுபட்டு ஒரு பள்ளம் உருவாகும். இப்ப பூமியை அந்த உருண்டை போல உருவகம் செய்தால் உருவாகும் இழுவை தான் புவி ஈர்ப்பு விசை. நம்ம எல்லோரும் பறக்காம நின்னுட்டு இருக்கறதுக்கு காரணம்.


சரி இப்போ பத்து பக்கத்துக்கு விதிமுறைகளை எல்லாம் விளக்கமா சொல்லாம நேரா விசயத்துக்கு வருவோம். இப்போ இந்த கோட்பாடு தான் டைம் டிராவல் சாத்தியம் அப்படின்னு நம்பிக்கை கொடுதுச்சு.

WORMHOLE
இதுக்கு நிகரான தமிழ் வார்த்தை எங்கயும் கிடைக்கல, அதனால் சொந்தமா சிந்திச்சு திருகுருவத் துளை அப்படின்னு குத்துமதிப்பா சொல்றேன்.

இப்போ மறுபடியும் அதே ரப்பர் சீட்ஒரு சின்ன புள்ளி மேல அதீத கனமான ஒரு பொருள் மூலமா அந்த சீட் மடிக்கபட்டு அதோட மறுபக்கதத்துல போய் சேர ஒரு துளை உருவாகும். அந்த துளையோட மறுபக்கம் வேற ஒரு SPACETIME பரிமாணம், அதாவது வேறு ஒரு கால நேரம்.


மேலே உள்ள படத்தில் ஏறும்பு இந்த துளையின் ஒரு முனையிலுருந்து இன்னொரு முனைக்கு ஒளியின் வேகத்துல போனா வேற ஒரு காலகட்டதுக்கு வேறு ஏதாவது ஒரு இடத்திற்கு போய்விடலாம்.
 


சரி கடைசி பகுதி விரைவில், அதுல டைம் டிராவல் பண்றதுல இருக்கற முரண்பாடுகள் பற்றி பாக்கலாம்.

Tuesday, July 12, 2011

தமிழை கணினியால் மேம்படுத்துவோம்




சுபாஷினி பேட்டி

தமிழ் மரபு அறக்கட்டளை எந்த சூழலில் துவங்கினீர்கள்? மரபுப்பணியில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?

       தமிழ் சமூக, பாரம்பரிய வரலாற்று ஆவணங்களை இணையத்தில் மின்பதிப்பாக்கி அதன் அசல் கெடாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று தொடங்கிய ஒரு முயற்சி இது. ஐரோப்பிய சூழலில் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் வழிமுறைகளை நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த போது அவ்வகையில் தமிழ் வரலாற்று ஆவணங்களும் மின்பதிப்பாக்கம் கண்டு பொதுமக்கள் பார்வைக்கும் வாசிப்பிற்கும் பயன்படும் வகையில் முயற்சிக்க வேண்டும் என்று இந்தக் கருத்தினை உருவாக்கினோம். மிகப் பெரிய கனவு இது என்றே சொல்ல வேண்டும். தமிழர் வரலாற்றினை உள்ளடக்கிய வாழ்வியல், கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், மெய்ஞானம் சரித்திரம் ஆகிய எல்லா அங்கங்களையும் எவையெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அவை அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ரீதியில் இந்த  முயற்சியைத் தொடங்கினோம். ஐரோப்பிய சூழலில் ஆவணப் பாதுகாப்பு என்பது தொழில் நுட்ப வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு மிகத் துரிதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அசல் எவ்வாறு தூய்மையாக பாதுகாப்பாகப் பாதுகாக்கப்படுகின்றதோ அவ்வாறே மின்பதிப்பு செய்யப்பட்ட ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப்படுவதும் அச்சுப் பதிப்பு காண்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது ஆரோக்கியமான ஒரு பணி. தமிழகச் சூழலில் நம் தமிழர் பாரம்பரியச் சான்றாக விளங்கும் ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இன்னமும் முழுமையாக மின்பதிப்பு செய்யப்பட்டு பொது மக்களுக்குக் கிடைக்கும் வண்ணம் வகை செய்யப்படாமலேயே இருக்கின்ற சூழலைக் காண்கின்றோம். தொல்பொருள், சுவடியியல் ஆவணவியல் துறை அறிஞர்கள் சிலரது அயராத உழைப்பின் பலனாக தற்சமயம் பல நூல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் இவை போதாது. இன்னமும் தனியார் வசமுள்ள பல ஓலைச் சுவடிகள் அதன் உள்ளடக்கம் அறியப்படாமல் வாசிப்பாரற்று பெட்டிகளில் முடங்கிக் கிடக்கின்றன. பல ஆலயங்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாப்பின்றியும் வாசித்து படியெடுக்கப்படாமலுல் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் கல்வெட்டுக்கள் உள்ளன. தனியார் பலரிடம் செப்பேடுகள் இருக்கின்றன. இவ்வைகையான சரித்திர ஆவணங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆராயப்படும் போது மென்மேலும் புதிய செய்திகள் நம் வரலாறு பற்றி கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இவ்வகையான சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். பொது மக்களும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களாக மாற வேண்டும் என்ற நோக்கில் அவர்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழ் மரபு அறக்கட்டளை என்ற இந்த முயற்சி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட 2001ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வந்து இங்கு களப்பணிகளில் ஈடுபடுவடுதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றேன். 10 ஆண்டுகள் நிரைவுற்று 11ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம். அந்த வகையில் தமிழகத்திலும் மற்ற பல இடங்களிலும் பல்வேறு தமிழ் ஆவணங்கள் மின்படிப்பு பற்றிய விழிப்புணர்ச்சி கருத்தரங்களையும் சந்திப்புக்களையும் இவ்வாண்டு நடத்தி வருகின்றோம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் முக்கிய பணிகளை விளக்கவும்.

      தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக பழந்தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் ஆகியவற்றை மின்பதிப்பு செய்வது எங்கள் பணிகளில் முக்கியமான ஒன்று. பல நூல்கள் வெளியிடப்பட்டு மறுபதிப்பு காணாமலேயே மறைந்து விடுகின்றன. சில நூல்கள் மறுபதிப்பு கண்டாலும் அவையும் கூட மக்கி அதன் வாசிப்பு நிலையை இழந்து விடும் நிலை ஏற்படுகின்றது. இவ்வகையான நூல்களை கணினி தொழில் நுட்பத்தின் வழியாக மின்பதிப்பு செய்து அவற்றை இணையத்தில் இணைத்து வைக்கும் போது அது உலகின் எல்லா மூலைகளிலும் வாழும் மக்களுக்கும் வாசித்துப் பயன்பெற வாய்ப்பளிக்கின்றது. நினைவிலேயே இல்லாமல் மறைந்து போன இவ்வகையான பல நூற்களை தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தில் நாங்கள் மின்பதிப்பாக்கி சேகரித்து வைத்துள்ளோம். அடுத்து ஓலைச் சுவடிகள். இன்றைய நிலையில் பலர் நமது மூதாதையர் எழுதி வைத்த ஓலைகள் எல்லாம் கிடைத்து விட்டன. அவை நூலகங்களிலும், அருங்காட்சியகத்திலும் ஆய்வு நிறுவனங்களிலும் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்ற கருத்தில் உள்ளனர். இது தவறான கருத்து. இன்னமும் கூட வாசிக்கப்பட்டு ஆராயப்படாத பல ஓலைகள்  தனியார் வசம் உள்ளன. இவை சேகரிக்கப்பட்டு முறையாக ஆராயப்பட வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். இது தவிர்த்து ஆய்வகங்களிலும் நூலகங்களிலும் உள்ள ஓலைச்சுவடிகளும் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இவை தவிர நாம் நாட்டுப்புறவியல், வாழ்வியல், வட்டார வழக்குகள் தொடர்பான தகவல்களை மின்பதிவு செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். நமது பணிகளின் வாயிலாக பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இலவசமாக பொது மக்களின் வாசிப்பிற்கு வழங்குகின்றோம். எங்களின் பிரதான வலைத்தளமான  http://www.tamilheritage.org/ இவ்வைகையான தகவல்களை கட்டுரை வடிவத்திலும், கேட்டு புரிந்து கொள்ளும் வகையில் ஒலிப்பதிவுகளாகவும், பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் விழியப் பதிவுகளாகவும் வழங்குகின்றோம். அத்துடன் பல்வேறு கட்டுரை தொகுப்பு மையமாக விக்கி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி http://www.heritagewiki.org/ என்ற மரபு விக்கி பகுதியையும் உறுவாக்கியுள்ளோம். இதில் தற்சமயம் ஏறக்குறைய 850 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் தமிழர் பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கும் வகையில் பதிவாக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர தமிழ் மரபு அறக்கட்டளை நான்கு வலைப்பூக்களைப் பராமரித்து வருகின்றோம். மரபு படங்களும் அதனை விளக்கும் செய்தியும் என்ற வகையில் மரபுப்படங்கள் வலைப்பக்கமும், ஒலிப்பதிவுகளின் மாதாந்திர வெளியீட்டிற்காக மண்ணின் குரல் என்னும் ஒரு வலைப்பூவும், விழியப் பதிவுகளின்(வீடியோ) பதிவிற்காக நிகழ்கலை என்னும் ஒரு வலைப்பூவும், மரபுச் செய்திகளுக்காக  செய்திகள் வலைப்பூவும் எங்களால் பராமரிக்கப்படுகின்றன.

தங்களுடைய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஒலைச் சுவடி திட்டத்தின் வெற்றி குறித்து பட்டியலிடவும்.

      2009ம் ஆண்டின் இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் ஓலைச் சுவடி தேடுதல் மற்றும் மின்னாக்கம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் அடிப்படையில் National manuscript Mission (NMM) வழங்கியிருந்த பட்டியலின் படி தமிழகத்தில் ஓலைச்சுவடி தேடுதல் பணி 2010ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதிநிதித்து இருவரும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சுவடிப்புலத்தைப் பிரதிநிதித்து ஒருவரும் இத்தேடுதல் பணியில் ஈடுபட்டோம். இத்தேடுதல் பணிகள் இரண்டு படி நிலைகளில் மேற்கொள்ளப்பட்டன. திரு.சுகுமாறன் அவர்களின் மேற்பார்வையில் முதல் படி நிலையில்  சென்னை, திருவள்ளூர், பழவேற்காடு, செங்கல்பட்டு, கொல்லிமலை,  ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், நாமக்கல், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் வழி ஏறக்குறைய 26,000 ஓலைகள் தனியாரிடமிருந்து சேகரிக்கப்பட்டு இவை தமிழ்ப் பலகலைக்கழகத்தில் பாதுகாப்பிற்காகவும் ஆய்வுக்காகவும் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட நடவடிக்கை செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் இறுதி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏறக்குறைய 59,000 ஓலைகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட ஓலைகள் பல்வேறு அளவில் அமைந்ததாகவும், பல்வேறு வடிவங்களில் அமைந்ததாகவும், பல்வேறு உள்ளடக்கம் கொண்டதாகவும் அமைந்துள்ளது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. பொதுவாக ஓலைச்சுவடி என்றாலே அது நாடி ஜோதிடம் அல்லது மருத்துவம் அல்லது இலக்கியம் என்று மட்டுமே பலர் கருதுகின்றனர். எங்கள் தேடுதலில் பல்தரப்பட்ட ஓலைகளை சேகரித்துள்ளோம். ஆழமான இலக்கியம் மட்டுமன்றி கதைகள், பாடல்கள் இவற்றோடு சித்த வைத்திய ஓலைகள், மாட்டு வைத்திய ஓலைகள், ஜோதிட ஓலைகள், பட்சி சாஸ்திரம், குடும்ப விஷயங்கள், கணக்குகள் எனப் பல விஷயங்களை உள்ளடக்கிய ஓலைகளை சேகரிக்க முடிந்தது. நாங்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்திய இந்த திட்டம் வெற்றிகரமாக நல்ல பலனை வழங்கியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். தமிழகமெங்கும் ஓலைகள் முழுமையாக தேடப்பட்டு அது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விட்டது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் தனியார் பலரிடம் ஓலைச்சுவடிகள் பெட்டிகளில் முடங்கிக்கிடக்கின்றன. அவை அவர்களால் முறையாகப் பாதுகாக்கப்பட்டாலும் கூட இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் வாசிப்பு நிலை இழந்து கெட்டு விடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மிகத் துரிதமாக இவை மின்னாக்கம் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் இருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆய்வு நிறுவனங்களில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஓலைகள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன் என்ற போதிலும் தனியாரிடம் பெரு வாரியாக இன்றளவும் உள்ள ஓலைகளின் நிலை கேள்விக்குறியான நிலையிலேயே உள்ளது. சிலர் இரும்புப்பெட்டியில் பல ஆண்டுகளாக திறக்காமலேயே பூட்டி வைத்திருக்கின்றனர். அவை பூச்சிக்களால் சேதம் செய்யப்பட்டு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலே இருப்பதும் உண்டு. சிலர் ஓலை பாதுகாப்பு முறை பற்றி தெரியாமல் அவற்றை தூய்மை செய்கின்றோம் என நினைத்து சோப்பு தேய்த்து கழுவி வெயிலில் உலர்த்தி காயவைத்து சேதப்படுத்து விடுகின்றனர். சிலர் பழைய துணி மூட்டைகளில் கட்டி எங்கோ ஓர் மூலையில் பத்திரப்படுத்தி வைப்பதாக நினைத்துக் கொண்டு அவைகளைச் சேதப்படுத்தி விடுகின்றனர். சிலர் தங்கள் குடிசைகளின் கூரைகளுக்கிடையே பதுக்கி வைத்திருக்கின்றனர். இவை மழை, கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு வாசிப்பு தான்மை இழந்து காணப்படுகின்றன. இவ்வகையில் நமது இலக்கிய வரலாற்றுச் செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருவதைக் காணும் போது அது மனதிற்கு பெரும் வேதனை அளிப்பதாகவே உள்ளது. இது விரைவில் களையப்பட வேண்டும். பொது மக்களும் உனர்ந்து தங்கள் வசமுள்ள ஓலைகள் முறையாக பாதுகாக்கப் படவும் மின்பதிப்பாக்கம் செய்யவும் ஒத்துழைக்க முன்வர வேண்டும். இப்படி சேகரிக்கப்படும் ஓலைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதிலுள்ள தகவல்கள் தற்காலத் தமிழில் எழுதப்படும் போது பல புதிய தகவல்கள் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சில வேலைகளில் ஒரே சுவடிகள் பல பாட பேதங்களுடன் கிடைப்பதுவும் உண்டு. இவையும் ஆராயப்பட வேண்டும்.     
 
தமிழ் மரபு அறக்கட்டளை கல்வெட்டியியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறதா?

     ஆம். கல்வெட்டியல் ஆய்வுகளின் வழி தமிழர் வரலாற்றுத் தகவல்கள் முறையாக் நமக்கு வழங்கப்படக் கூடிய பெரும் சாத்தியம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கல்வெட்டியியல் தொடர்பான பல தகவல்களை மின்பதிப்பாக்கி வருகின்றோம். அந்த வகையில் கட்டுரைகள், பேட்டிகளின் ஒலிக்கோப்புக்கள், வீடியோ பதிவுகள் என தகவல்கள் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டியியல் ஆய்வாளர்களின் ஆலோசனைகளை ஏற்று நமது பதிப்புக்கள் செம்மையுடன் பதிப்பிக்கப் படுகின்றன.மேலும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுத்தகவ்ல்களோடு இப்பகுதியை வளப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசையும் கூட.

உங்களுடைய் 'மின்தமிழ்' மின்னஞ்சல் குழுமத்தைப் பற்றி விளக்கவும்,

   யாவரும் இதில் உறுப்பினராகலாமா?
மின்தமிழ் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி அரங்கமாகவும் மடலாடற் குழுவாகவும் செயலாற்ற உருவாக்கப்பட்டது. முற்றிலும் இணையத்திலேயே (Internet)  இயங்கும் ஒரு தளம் இது. தமிழ் மொழி, மரபு, பாரம்பரியம், கலை, நாட்டுபுறவியல், வரலாறு ஆகிய விஷயங்களில் ஆர்வமுள்ள அனைவருமே இந்த மடலாடற்குழுவில் பங்கு பெறலாம். இதில் இணைந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. இணைய விரும்புபவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியைக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுக்குப் பின்னர் தங்கள் கருத்துக்களைப் பதியவும் பிறர் கருத்துக்களுக்குப் பின்னூட்டங்கள் சேர்க்கவும் முடியும். இதுவரை உலகளாவிய ரீதியில் 1300 உறுப்பினர்கள் இந்த மடலாடற்குழுவில் இணைந்துள்ளனர். உலகமெங்குமுள்ள தமிழ் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள், அறிஞர்கள் இந்த மடலாடர் குழுவில் இணைந்து இங்கு நிகழும் கருத்துப் பரிமாற்றங்களை மேலும் வளப்படுத்த வேண்டும் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் இலக்காகும்.

 

Wednesday, July 6, 2011

Devil's English -Tamil Dictionary - Alphabet A

ABSURD நமது அபிப்ராயத்திற்க்கு மாறான எல்லா விஷயமும்
ABSINTHE சோம்புப்பானம்
ABSRACT பில்ட் அப் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா பினிஷிங்க் தான்
ACQUAINTANCE கடன் கொடுக்கும் அளவு பழக்கம் இல்லாதவர்கள் ஆனால் கடன் வாங்கும் அளவு பழக்கமானவர்கள்
ADAMANT அகம் பிடிச்ச கழுதை
ADHERENT கொள்கை பரப்பு செயலாளர்
AFFINITY அநேக திருமணங்களில் காணாமல் போகும் வஸ்து
AFFLICTION டிக்கெட் வாங்குவது
AFTERTHOUGHT வேலியில் சென்ற ஓணானை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு குடயுது என்பது
ALLIANCE கூட்டு களவானித்தனம்
AMBIDEXTROUS இரண்டு கைகளிலும் பிளேடு போட்டு பர்ஸ் அடிக்கும் தில்லாலங்கடி
AMNESTY மக்கள் வரி பணத்தை மிச்சம் செய்ய அரசாங்கம் எடுக்கும் முயற்சி
ANGEL காக்கை போல பறக்கும் ஒரு பறவை அல்லது சூப்பர் ஃபிகர் என இரண்டு பொருள் தரும்
ANTIPATHY நாம் ரூட் போடும் ஃபிகரின் ஆண் நண்பன் மேல் வரும் ஒரு வகை உணர்ச்சி
APOSTATE நமக்கு உதவி செய்யாதவர்கள்
APOTHECARY சவக்கிடங்கிற்கு செல்லும் முன் பிணத்தை பக்குவம் செய்பவர்
ARCHITECT ஸ்கெட்ச் போட்டு பணம் திருடும் மொள்ளமாரி
ARTIST நீண்ட முடியுடன் பிள்ளை பிடிப்பவன் தோற்றத்துடன் இருப்பர் யாருக்கும் புரியாத வகையில் கிறுக்கி அதை அதிக விலைக்கு விற்பவர்கள். 

Thursday, June 30, 2011

TIME TRAVEL சாத்தியமா - PART II (SPACETIME CONTINUUM)

Einstein’s Theory of Relativity - காலமும் இடமும் வேறு அல்ல, இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை, நமக்கு இன்னும் புலப்படாத ஒரு பெரிய கட்டமைப்பின் ஒரு பகுதி.

 
  SPACE+TIME=SPACETIME

இன்னும் தெளிவா புரிய ஒரு SCI-FI ROMANCE

2105 AD 10:00 AM
சிங்கார சென்னை

நம்ம மணி காலைல எந்திரிச்சு பள்ளு கூட விளக்காம, வீட்ல இருந்து கெளம்பி தெரு முனைல இருக்கற CAFÉ (டீ கடைக்கு) போயி ஒரு LONG BLACK (அதாங்க டீ) சொல்லிட்டு நிகோட்டின் இன்ஹேளர் எடுத்து ஆன் பண்றான் (புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு).

இதையே கொஞ்சம் GRAPH போட்டா


கதைக்கு திரும்ப வருவோம்

10:30 AM
அப்ப அந்த வழியா லேடஸ்ட் மாடல் ULTIS65K பைக்மணியோட தோஸ்த் ராஜு வரான், இன்னொரு முனைல இருந்து STREAK ஹோவர்ல ஆர்த்தி மிதந்துட்டு வர (கரெக்ட் பேக்ரவுண்ட்ல ஹீரோயின் என்ட்ரி தீம் சாங்க்), காத்துல அவ துப்பட்டா பறக்குது. ரெண்டு பேரும் அவ துப்பட்டாவ பாக்கறாங்க.

இங்க கதைல ஒரு ட்விஸ்ட் வைக்றோம்

நின்னுட்டு இருக்க நம்ம மணியோட கண்ணுக்கு துப்பட்டா வேகமா பறக்கர மாதிரி தெரியுது. ஆனா பைக்ல வர்ர ராஜுவுக்கு அதே துப்பட்டா மெல்ல பறக்கர மாதிரி தெரியுது. ரெண்டு பேர் பாக்கறதுமே உண்மைதான்.

இதுக்கு காரணம் ஒரு பொருள் இன்னொரு பொருளோடு RELATIVE MOTIONல இருக்கும்போது SPACE மற்றும் TIME வேறுபடும். இத இருநூறு வருசத்துக்கு முன்னாடி EINSTEIN கண்டுபிடிச்சு சொன்னது இந்த கூமுட்டைகளுக்கு தெரியாது.
 
ஆர்த்திய பாத்த உடனே பைக்ல பத்தாவது கியர்ல இருந்து அஞ்சாவது கியர் போட்டு வர்ர் வார்ர்னு வண்டிய உறும விட்டு திருப்ப.

சத்தம் கேட்டு திரும்பி பார்த்த ஆர்த்தி அய்யய்யோ சனியன் சீன் போட்டுட்டு வருதே”, என்று கடுப்போடு அக்சிலேட்டரை முறுக்கி ஒளி வேகத்திற்கு செல்கிறாள்.

ராஜு உடன் பைக் மோடிலிருந்து ஹோவர் மோடிற்கு மாறி ஒளி வேகத்திற்கு பறக்கிறான். வண்டியின் ஹீலியம் பேட்டரி சிகப்பு லைட் உடன் கதற தொடங்கியது.

கொஞ்சம் நேரம் தாக்குபிடி பஞ்சகல்யாணி”, என்று வண்டியை தட்டி கொடுத்து முன்னேறுகிறான்.

ஆர்த்தி சே வேற வழியே இல்ல வண்டியை கூவத்தின் மீது ஹோவர் செய்து PHOTON BOOSTERஐ ஆன் செய்கிறாள். STREAK ஒன்றரை ஒளி வேகத்திற்க்கு பறக்கிறது.

10:35 AM
நம்ம மணி டீ சாப்பிட்டு கொண்டு நடக்கிற காமெடிய பார்க்கிறான்.

ராஜுவின் ஹீலியம் பேட்டரி கடைசி முனகலோடு தனது இயக்கத்தை நிறுத்துகின்றது, வண்டி வேகம் குறைந்து தெளிந்த கூவ நீரில் மூள்க தொடங்குகிறது.

ஆர்த்தி சாவுடி மகனே, புதுசா ரெண்டு முதலை இப்பதான் உட்டாங்க என்றபடி தனது வாட்ச்சை பார்க்கிறாள்.

10:32 AM

சே, மொதல்ல RELATIVITY PROOF வாட்ச் வாங்கணும், மறுபிடியும் ஸ்லோ ஆயிடுச்சு

கரெக்ட் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க ஒளியின் வேகத்தை கடந்ததால் ஆர்த்தி மூன்று நிமிடம் பின்னோக்கி TIME TRAVEL செய்துவிட்டாள். இது எப்படி சாத்தியம்!!?

SPACETIME என்பது ஒரு வலை போன்ற அமைப்பில் இணைந்து இருக்கும், ஆர்த்தி ஒளியின் வேகத்தை கடந்த போது, அவள் வலையின் ஒரு பகுதியை ரப்பர் போல இழுத்து விட்டாள். அதாவது வேகமாக செல்வது போல் இருந்தாலும் அவாள் அதே இடத்தில் அதே நேரத்தில் தான் இருந்தாள்.

அதாவது ஆர்த்தி ராஜூவை விட அரை ஒளி வேகமாக சென்றாள், ராஜு ஒரு ஒளி வேகத்தில் சென்றான் ஆனால் மணியை பொறுத்த வரை இவர்கள் இருவருமே ஒளியின் வேகத்தை விட வேகமாக செல்லவில்லை.

தொடரும்.....