இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, நான் சந்தித்த மனிதர்களின் சாரல் இதில் இருக்கலாம் ஆனால் இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதபடவில்லை.
எப்பவும் போல ஒரு கரண்ட் கட் வேளையில் மல்லாக்க படுத்து கொண்டு ஓடாத டிவியை வெறித்து பார்த்து கொண்டு இருந்தேன். என்னுடன் அறையை பகிர்ந்த நண்பன் (கேட்டு கொண்டதற்கிணங்க பெயர் நீக்கப்பட்டது) பக்கத்து கட்டிலில் படுத்து கொண்டு துணைக்கு அதே டிவியை வெறித்து கொண்டு இருந்தான். இன்றைக்கு என்று பார்த்து மூளை குறுகுறுவென வேலை செய்து தொலைத்து “சே ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தா இந்நேரம் எங்கயாச்சு போய் ஊரை சுத்திகிட்டு இருந்திருக்கலாம்” என்று புலம்பினான். எனது ஜாதகத்தில் உச்சத்தில் இருந்த சனி பகவான் அவன் நாவில் வந்து அமர்த்து கொண்டதை நான் அறியவில்லை.
முந்தய இரவு முழுவதும் அவன் சொன்னதை பற்றி யோசித்து கொண்டு இருந்த காரணத்தாலும் எனது ஜாதக கட்டங்கள் உந்தி தள்ளிய காரணத்தாலும் நேராக ஆபிஸ் ஜாக் ராஜூவின் முன்னாள் போய் நின்றேன். ராஜூவை பற்றிய ஒரு முன்கதை சுருக்கம் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும், என்னை போன்ற பேக்குகளுக்கு பெண்கள் விஷயத்தில் ஐடியா கொடுப்பதற்காகவே அவதரித்த ஆபத்பாந்தவன். பான் பராக் போட்டு துப்பிய எச்சில் நிறத்தில் தலைச்சாயம், பகுட்டில் பல்லி வால் போன்ற மெல்லிய தாடி, ஒற்றை நாடி உருவம், நல்ல சிகப்பு, தமிழ் சினிமாவில் ஹீரோவின் தங்கையை காதலித்து கரெக்ட் செய்யும் வில்லனின் தம்பி கேரக்டர் போல இருப்பான். ரொம்ப நாளாக ஆபிஸ் வேலை எதையும் செய்யாமல் சினிமா சான்ஸ் தேடி கொண்டு இருப்பவன், தாய்மார்கள் அனைவருக்கும் முன்பே அறிமுகமானவன், “டூ விட்ட தங்கச்சி” சீரியலில் கடந்த பத்து வாரங்களாக ஹீரோவின் தங்கையை இழுத்து கொண்டு ஓடிக்கொண்டிருப்பது சாட்சாத் நம்ம ராஜு தான். அவனை அழைத்து சென்று டீ வாங்கி கொடுத்து எனது பிரச்சனையை விளக்கினேன்.
ராஜூவின் யோசனையை எல்லோரும் நாடி போக காரணம் அவனது தெளிவான அணுகுமுறை. எந்த அளவு தெளிவு என்றால், எந்த ஒரு விஷயத்தையும் ஒரு கணித கேள்வியை தீர்வு செய்வது போன்று சமன்பாடுகளுடன் விளக்குவான்.
ஒரு சின்ன காகிதத்தில் எனது வாழ்க்கை பாதையை 12B படத்தில் வருவது போல பின்வருமாறு விவரித்தான்.
IDEA I
நீ + உஷா = கனவில் கூட நடக்காது
(ஹைட் கம்மி, (அரேபிய குதிரை
வீக் பாடி, போன்ற உடல்வாகு,
மாநிறம், சுமார்) சுண்டினால் சிவக்கும் நிறம்)
இவன் எனது நண்பன் தானா என்ற யோசனை வந்தது அதற்க்குள் என்னை பேச விடாமல் அடுத்த யோசனைக்கு தாவிவிட்டான்.
IDEA II
நீ + ஆர்த்தி + X = நடக்கலாம்
(ஹைட் கம்மி, (வசீகரமான கண்கள்
வீக் பாடி, லட்சணமான முகம்,
மாநிறம், சுமார்) சிகப்பு)
இதில் X ஒரு CATALYST அதன் முழு விவரம் இந்த பதிவில் அடங்காத காரணத்தால் முக்கிய புள்ளிகள் மட்டும் கீழ்வருமாறு
1.) ஆறு மாத கடுமையான உடற்பயிற்சி
2.) தெலுங்கு பட நாயகன் போல அடிக்கும் நிறத்தில் உடைகள்
3.) SANTRO அல்லது I10
4.) கூர்முனை தலைமயிர்(spike)
அவனிடம் நான் ஒரு பிறவி சோம்பேறி என்பதையும் எனது நிறத்திற்க்கு சிகப்பு சட்டை மற்றும் spike பொருத்தமாக இராது என்பதை மிக பொறுமையாக விளக்கி அடுத்த ஆலோசனைக்கு செல்லுமாறு கூறினேன்.
IDEA III
நீ + வாணி = உடனே காதல்
(ஹைட் கம்மி, (நவ நாகரீக உடை,
வீக் பாடி, ஒற்றைநாடி உருவம்,
மாநிறம், சுமார்) மாநிறம், சுமார்)
நான் தயக்கத்தோடு யோசிப்பதை பார்த்துவிட்டு மீண்டும் எனது குறைகளை அடுக்கி நீண்ட பட்டியல் போட்டு என்னை கடுப்பேற்றினான். நான் முறைப்பதை பார்த்துவிட்டு நிலவரத்தை விளக்கினான், வாணி தற்சமயம் அவளது முந்தய பாய் ஃப்ரெண்ட் உடன் இருந்து பிரிந்து விட்டதால் வேறு யாரும் முந்தி கொள்வதற்க்கு முன்னாள் நான் களமிறங்கும் அவசியத்தை எடுத்து கூறியதோடு அன்றி என்னை தரதரவென இழுத்து சென்று அவளிடம் அறிமுகம் செய்தான். அவளும் ரொம்ப நாள் பழகியது போல சகஜமாக காபி சாப்பிட அழைத்தாள், நானும் பின்னால் வரும் இடியாப்ப சிக்கல்களை உணராமல் கிளம்பினேன்.
- தொடரும்
- தொடரும்