Sunday, January 11, 2015

பேய்களின் சீசன் - பான்ஷீ (BANSHEE)

    
      இது பேய்களின் சீசன் என்பதால் என்னுடைய சமிபத்திய ஆராய்ச்சிகளும் பேயை பற்றியே இருந்தது. அதில் நான் பார்த்த பழங்கால செல்டிக் நாட்டுப்புற கதைகளில் வரும் பான்ஷீ பற்றி பார்க்கலாம். நீங்கள் முன்னரே “screaming like a banshee” என்ற சொற்றொடரை எங்காவது படித்திருப்பீர்கள். அப்படி படித்து அதன் அர்த்தத்தை ஆராய்ச்சி செய்த போது நான் அறிந்தவை.

        பான்ஷீ பெண் வடிவம் கொண்ட ஒரு துர்தேவதை, குடும்பத்தில் ஒரு மரணம் விழும் வேளை வரும் பொழுது இதன் கிரீச்சிடும் ஒப்பாரி ஓலம் கேட்கும் என்பது நம்பிக்கை.

     நடுநிசியில் ஒரு வயதான பெண் வடிவில் வந்து மரணம் நடக்கவிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில், இறக்கப் போகின்றவரின் ரத்தம் படிந்த துணிகளை ஒப்பாரியுடன் துவைத்து கொண்டு இருக்கும் என்பது ஸ்காட்லாந்து மக்களின் நம்பிக்கை. (ஆனால் நடுநிசி நேரத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு அகோரமான கிழவி உங்கள் ரத்தம் படிந்த சட்டையை, அழுது கொண்டே, துவைத்து கொண்டு இருந்தால் உங்களுக்கு பீதியில் இதயம் நின்று விடாதா?)



        பான்ஷீயின் தோற்றம் பலவாறு கூறப்படுகிறது, இது பெரும்பாலும் கிழிந்த ஆடையுடன் ஒரு வயதான கிழவி வடிவில், கூர்மையான அழுகிய பற்கள் மற்றும் இரத்த நிறத்தில் அகோரமான கண்களுடன் இருக்கும். பான்ஷீ ஒரு சில சமயம் அழகிய இளம் பெண் அல்லது தலை இல்லாத முண்டமாக கையில் இரத்தகலசத்துடன் இருக்கும் என்பதும் நம்பிக்கை.


           இந்த பான்ஷீயை பற்றி பல கதைகள் உலவுகின்றன. இது மிகவும் கொடுமைக்கு உள்ளாகி கோரமாக இறந்த ஒரு பெண்ணின் ஆவி என்றும், அதன் வம்சா வழியில் வரும் மக்களுக்கு, ஆபத்து வருவதை முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கை செய்யும் என்று கேள்வி.

             இன்னொரு நம்பிக்கையில், சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கும் பெண்கள் அதற்கு கூலியாக மதுவை பெற்று வாழ்ந்தனர். அந்த பெண்கள் கிறித்துவ மத கோட்பாடுகளுக்கு இணங்காமல் வாழ்ந்ததால், சொர்க்கம் சேராமல் பூமியில் ஒப்பாரியுடன் உலவுவதாக சொல்வர்.

         ஆனால் இந்த ஆயிரம் வருட நம்பிக்கையின் உண்மை காரணம் “Barn owl” என்ற ஒருவித ஆந்தையின் அலறல் சத்தம். அது ஒரு வயதான பெண்ணின் கிரீச்சல் போன்று இருப்பதே இந்த நம்பிக்கையின் காரணமாக இருக்கலாம் என்று அண்மையில் கண்டுபிடித்து உள்ளனர்.


No comments:

Post a Comment