Tuesday, November 25, 2014

பஸ் பயணத்தின் போது பொழுது போக பத்து யோசனைகள் - பகுதி I


         
        புத்தகம் படிப்பது, ஐபாடில் பாட்டு கேட்பது போன்ற மட்டமான யோசனைகளை இதில் எதிர்பார்க்காதீர்கள். இதில் வரும் யோசனைகள் சக மனிதனுக்கு மரியாதை கொடுப்பது, நல்லொழுக்கமுடன் திகழ்வது போன்ற கொள்கைகளை உடைய சராசரி மனிதர்களுக்கு அல்ல. எப்பவும் எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். இந்த பதிவில் பேருந்து பயணத்தின் பொழுது நான் சந்தித்த மனிதர்களின் தாக்கம் இருக்கும். இந்த பயணம் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கோ அல்லது வேண்டிய இடத்தை அடைவதற்கோ அல்ல, இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே.

         இது ஒரு கடினமான பாதை. இதில் காலடி எடுத்து வைக்க மிக்க தைரியம் வேண்டும். இந்த பயணத்திற்கு முன் உடல், உயிர் மற்றும் ஆன்மா அனைத்தையும் உருக்கி ஊற்றி வேள்வி செய்வது போல தயாராக வேண்டும். 

பயணத்திற்கு தயார் ஆவதற்கு பத்து வழிமுறைகள்

1) முதல் காரியமாக இன்சூரன்ஸ், உயில் மற்ற இத்யாதிகளை தயார் செய்து விடவும். 

2) ஆறு மாதத்திற்கு முன்பே உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும், நமது நேரம் மோசமாக இருந்து தொலைத்தால் அடி வாங்க உடம்பில் தெம்பு வேண்டும் அல்லவா!!!

3) ஏதாவது ஒரு கோயில் வாசலில் உள்ள பிச்சைக்காரர் வசமிருந்து ஐந்நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் காசுகளாக சில்லறை மாற்றி கொள்ளவும். பணப் பற்றாக்குறை எனில் அவரிடம் வட்டிக்கு கடன் வாங்கலாம்.

4) நான்கு நாட்கள் முன்பே ரோட்டு கடையில் பிரியாணி வாங்கி வைத்துக் கொள்ளவும்.

5) இராணுவத்தில் பயன்படுத்தப்படும் முரட்டுக் காலனி ஒரு ஜோடி வாங்கவும்.

6) மஞ்சப்பை - இப்பொழுது எந்த துணி கடையிலும் மஞ்சப்பை தருவது இல்லை. வீட்டுப் பரணில் இல்லை என்றால் ஈரோடு சென்று ஆர்டர் செய்து வாங்கி வர வேண்டும். ("நகைக் கடையில் மங்களகரமாக இன்னும் மஞ்சப்பை தருகிறார்களே?" என்று கேட்கும் ப்ரகஸ்பதிகளுக்கு - நாம் பஸ் ஏறும் போது ஏழை பட்டிக்காட்டான் போல தெரிய வேண்டும். அதற்கு நகைக்கடை பை உதவாது)

7) மரியாதை என்னும் துண்டையும், மானம் என்னும் சட்டையையும் கழற்றி வீட்டு ஆணியில் மாட்டி விட்டு வரவும். அது இந்த பயணத்திற்கு தேவை இல்லை.


8) மிக முக்கியம், பயணத்தின் போது உறங்கிவிட கூடாது. அதற்காக முந்தைய நாள் இரவு நன்றாக உறங்க வேண்டும். இரவு பயணமெனின் விடுப்பு எடுத்து கொண்டு மதியம் உறங்கலாம் (வேலை போனாலும் கொண்ட கொள்கை மாறலாகாது). 

9.) பழைய பாக்யராஜ் படங்களை பார்த்து அதில் வரும் வசனங்களை கற்கவும், முடிந்தால் "The Art of Acting" by Stella Adler வாங்கி படிக்கவும். பில்லா முதல் பாகத்தில் பிரபு அவர்கள் அஜீத்திற்கு பயிற்சி கொடுக்கும் காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்கவும்.

10.) பேருந்து கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக பேருந்து நிலையத்திற்கு செல்லவும். பறக்கா வெட்டி போல பேருந்தை பார்த்தவுடன் ஓடிச் சென்று ஜன்னல் சீட் பிடிக்க வேண்டாம். கண் கொத்தி பாம்பாக பேருந்து ஏற வருபவர்களை கவனிக்கவும். நமது காரியத்திற்கு ஏற்றவாறு சிரித்த முகமாக யாராவது வருகிறார்களா என்று கவனிக்கவும், ஒற்றை நாடியாக இருந்தால் கூடுதல் வசதி. நமக்கு வாகாக ஒருவர் சிக்கியவுடன் உடனே முன்னாள் நிற்பவர்களை இடித்து தள்ளி கொண்டு, அவர் பின்னால் சென்று பக்கத்து இருக்கையில் மஞ்சப்பை போடவும். அவரிடம் மிகவும் மரியாதையாக, "நான் கழிப்பிடம் செல்கின்றேன் இருக்கையை பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு, இறங்கி வந்து பக்கத்து பெட்டிக் கடையில் மறைவாக நின்று தம் வாங்கி அடிக்கவும் (பழக்கம் இல்லை என்றால் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே பழகிக் கொள்ளவும்). 

தயார் ஆவதை படித்தே தலை சுற்றி இருக்கும். இனி பேருந்தில் ஏறிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

பஸ் பயணத்தின் போது பொழுது போக பத்து யோசனைகள் - பகுதி II


Tuesday, July 9, 2013

மழையின் மொழி



சற்று முன் பெய்த மழையின் ஈரத்தால்
அழுது கொண்டிருந்த கட்டிடங்களின்
மத்தியில் சென்றிருந்தேன்
ஓய்ந்த தூறல்களின் எதிரொலி கூட
இன்னும் நிற்கவில்லை

நெற்றி விளிம்பில் வழிந்த துளியில்
முந்தய மழையின் தருணங்கள் தெரிந்தன

எழும்பு உருக்கும் குளிரால்
உடைந்த மனங்களை உருக்கி ஒட்ட முடிந்தால்

அழுக்கை கழுவும் மழையால்
மனதின் வலியை கழுவ முடிந்தால்

பூமியை நனைத்து உயிரை படைக்கும் போதே
இறந்த உறவை திரும்பி கொடுத்தால்

இரவு பெய்யும் மழையில்
வானவில் எங்கே

முகத்தை முத்தமிடும் சிறு சாரல் மழை
முடிவில்லா தொரு அமைதியை கொடுத்தது

வருடிச் செல்லும் சிறு தூரலில்
தாயின் மொழி கேட்டது

மெல்ல பெய்து சளித்த மழை
பொழிய தொடங்கியது
இறைச்சலின் ஊடே ஒரு ஏகாந்தத்தை உணர்ந்தேன்

வீடு வந்து விட்டது
திறக்கும் பொழுது விரல் நனைத்தது கதவு

கருணை மழையாம்
காதல் மழையாம்
உயிர் மழையாம்
நனைந்த சட்டையை என்ன செய்வது ?
என்பது தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை
மழையின் மொழி மறந்து விட்டது

Wednesday, May 9, 2012

ஓர் நாள் இரவு



கனவுகள் கருகியதால் உறக்கம் தொலைத்து
இரவின் வழி சென்றேன்

வாழ்வும் சாவும் நிகழ்ந்த இடங்கள்
எண்ணிட்ட கட்டிடங்களாக தெரிந்தது

முகமறியா தோழன் போல காதினுடே
முணுமுணுத்தது பனி காற்று

பூமி மொத்தம் மனிததிரள் இன்றி
இரவுக்கு அடங்கி தூங்குகிறதா?

அல்லது !!!

மனிதம் தொலைத்து போகம் மட்டும்
கொண்டு வாழும் மாந்தர்தம்

பாரத்தின் வலி சகிக்க முடியாமல்
மெல்ல மெல்ல சாகிறதா

மேகம் விலக்கி எட்டி பார்க்கும்
நட்சத்திரத்தின் ஒளி கீற்று

அதை எங்கோ ஓர் காதலன்
காதலியின் கண்களில் உணர்கிறான்.

புதிதாய் ஒரு சிந்தனை!

அழிந்த பூமி விடியலில் மீண்டும்
புத்தம் புதிதாய் பிறக்குமோ

நான் இன்றோடு இறந்து மீண்டும்
புதிதாய் பிறக்க போகின்றேன்

புதிய மனிதனாய் புதிய கனவுகளோடு
சிவந்த கீழ்வானம் நோக்கி நடந்தேன்...

Sunday, January 22, 2012

கொல்கத்தா பயண அனுபவங்கள்


விமானத்தை விட்டு வெளியே வந்த போது என்னை வரவேற்றது சிமெண்ட் குடோன் போன்ற கொல்கத்தா விமான நிலையமும் நான் பணம் கட்டி முன்பதிவு செய்திருந்த கார் கம்பெனி அனுப்பி வைத்த பழைய ஓட்டை அம்பஸெடர் கார் மற்றும் வயதான ஒரு பெங்காலி மட்டுமே தெரிந்த டிரைவர். அவரிடம் எப்படியோ சைகை மொழியில் புரிய வைத்து ஹோட்டல் சென்று அடைந்தேன் (பின்னர் அவர்களிடம் சண்டை போட்ட பிறகு ஹிந்தி தெரிந்த டிரைவரும், இண்டிகாவும் அனுப்பி வைத்தது வேறு கதை, கார் கம்பெனிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம்).

ஒரு முறைக்கு மேல் கட்டிடம் மற்றும் கார் என எதற்கும் பெயிண்ட் அடிக்கும் பழக்கம் இந்த நகரில் இல்லை போலும், இதனால் மொத்த நகரமே பழையது போல் காட்சி அளிக்கிறது. இங்கு அம்பஸெடர் கார் எண்ணிக்கையில் மிக அதிகம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மிகவும் குறைவு, இதற்கு கட்டுபாடின்றி எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம் என்ற காரோட்டிகளின் கொள்கையினால் ஏற்பட்ட உயிர் பயம் காரணமாக இருக்கலாம்.

என்றோ வழக்கொழிந்த சைக்கிள் ரிக்ஷா, கை ரிக்ஷா மற்றும் டிராம் புழக்கம் இந்த நகரை மேலும் பழமையாக காட்டுகிறது. இதற்கு மேல் ஒடுக்கு விழ முடியாத தகர டப்பா போன்ற பஸ், மஞ்சள் நிற அம்பஸெடர் டாக்ஸி, பஸ் நுழையாத இடங்களுக்கு ஷேர் ஆட்டோ இவை இந்த நகரத்தின் அடையாளம். (இங்கு டாக்ஸியில் கண்டிப்பாக மீட்டர் போடுவார்கள், இப்போதைய நிலவரப்படி மீட்டர் X 2 + 2 என்று கணக்கு போட்டு பணம் கொடுக்க வேண்டும். அதாவது மீட்டரில் பத்து ரூபாய் காட்டினால் 10 X 2 + 2 = 22 ரூபாய் கொடுக்க வேண்டும்) ஷேர் ஆட்டோ பக்கமே செல்ல வேண்டாம் பத்து ரூபாய் வாங்கி கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையில் இறக்கி விடுவர். பஸ் மற்றும் ஆட்டோவில் செல்ல வழி கேட்க பெங்காலி தெரிந்திருப்பது அவசியம்.

இனி இங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி

VICTORIA MEMORIAL
ஆங்கிலேய ஆட்சியின் போது இராணியின் நினைவாக எழுப்பபட்ட பளிங்கு மண்டபம் இப்பொழுது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் பிரம்மாண்ட கூரை, சுவர் ஓவியங்கள், கட்டிட அமைப்பு ஆங்கிலேய கட்டிட வல்லமையைப் பறைசாற்றுகிறது. இதில் உள்ள ஓவியங்கள் மற்றும் புகைபடங்கள் மூலம் இந்த நகரத்தின் வரலாற்றை அறியலாம் (கொல்கத்தா ஒரு காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது என்பது பலருக்கு ஆச்சர்ய செய்தியாக இருக்கும்). இங்கு ஒரு மோதிரத்தின் உள்ளே நுழைந்து வெளியே வரும் அளவு மெல்லிய மஸ்லின் புடவை காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. போர்வாட்கள், உடைகள், பீரங்கி என பல அறிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல பொருட்கள் சரியான கவனிப்பு இன்றி துரு பிடிக்க துவங்கி உள்ளது வேதனையாக இருந்தது. இது கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடம்.

BIRLA MANDIR
பிர்லா மந்திர்
 வெள்ளை பளிங்கு கொண்டு கட்டப்பட்ட கோயில், ஹைதராபாத்தில் உள்ள பிர்லா மந்திரின் அமைப்பில் உள்ளது. இரவு நேரத்தில் விளக்குகளுடன் ஜொலிக்கும் கோபுரம் மிக ரம்மியமான காட்சி. இங்கு சிலைகள் அனைத்தும் வெள்ளை பளிங்கினால் செய்யப்பட்டது. (கண்டிப்பாக கற்பூரம் ஏற்ற அனுமதி இல்லை). இங்கு திருமாளின் அனைத்து அவதாரங்களும் சிலை வடிவில் உள்ளது. கொல்கத்தாவில் சுற்றுசூளல் எவ்வளவு மாசுபட்டு உள்ளது என்பதற்கு இந்த கட்டிடத்தின் தற்போதைய நிறம் ஒரு உதாரணம்.

GREAT BANYAN TREE
இது INDIAN BOTANIC GARDEN என்ற மிக பறந்து விரிந்த தாவர பூங்காவின் மத்தியில் உள்ளது. இது 250 வருடங்களுக்கு முன்பு முளைத்தது, இன்று கின்னஸில் இடம் பெரும் அளவு 1.5 ஹெக்டேர் பரப்பிற்க்கு வளர்ந்துள்ளது, கீழே விழும் விழுதுகள் வேரூன்றி தொடர் மரமாக மாறிய அதிசயத்தை காணலாம். ( இங்கு பார்பதற்க்கு மரத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை நேரம் இல்லாவிடில் தவிர்க்கலாம்)

HOWRAH BRIDGE
பல சினிமாக்களில் பார்த்த ஹவுரா ப்ரிட்ஜ், இது ஒரு போல்ட் கூட உபயோகபடுத்தாமல் உருக்கி ஒன்று சேர்த்து கட்டப்பட்டது. இது சுற்றுலா தளம் இல்லை, பார்பதற்க்கு ஒன்றும் இல்லை, வேண்டுமானால் ஹவுரா ப்ரிட்ஜ் பார்த்தேன் என சொல்லி கொள்ளலாம்.

GARIA HATT
இது சாலை நடைபாதை கடைகளுக்கு பிரசித்தி பெற்ற ஒரு இடம். நடைபாதை கடைகள் தானே என எண்ண வேண்டாம் நல்ல தரமான பொருட்களும் கிடைக்கும் கொஞ்சம் பேரம் பேச வேண்டும் (பெங்காலி மொழியில் கிச்சு கொம் கரோ என்றால் கொஞ்சம் கம்மி செய்யுங்கள் என்று பொருள்). இங்கு நான் வாங்கிய பொருட்களின் மொத்த மதிப்பு 6500. கைவேலைபாடுகள் கொண்ட அழகான, தரமான நியாய விலைக்கு பெங்காளி புடவை வாங்க இங்கு உள்ள Traders Assembly Mega Shop (208/7, Rashbehari Avenue) கடைக்கு செல்லலாம் (ஆனால் இந்த கடையில் பேரம் பேசக்கூடாது).

DAKSHINAPAN SHOPPING COMPLEX
இது GARIA HATT இல் கலை பொருட்கள், நுண்ணிய வேலைப்பாடு அமைந்த சிலைகள் மற்றும் உடைகள் வாங்க சிறந்த இடம். இதன் சிறப்பு அம்சம் இங்கு உள்ளவை ஒவ்வொரு மாநில அரசு நடத்தும் கடைகள், இதில் அந்தந்த மாநிலத்தின் சிறந்த கலை பொருட்களை விற்கப்படுகின்றன ( தமிழக அரசு நடத்தும் மண் சிற்பங்கள் விற்கும் கடையும் உள்ளது ).

NEW MARKET
இது கிட்டதட்ட GARIA HATT போன்று நடைபாதை கடைகளுக்கு பிரசித்தி பெற்ற ஒரு இடம், ஆனால் இங்கு கடைக்காரர்கள் ஆங்கிலமும் பேசுவார்கள், இதற்க்கு மிக அருகில் உள்ள ஹிப்பி காலனி ஒரு முக்கிய காரணம்.

DAKINESHWAR KAALI TEMPLE & BELUR MATT
காளி கோயில்
கொல்கத்தா நகரின் மிகுந்த புகழ் வாய்ந்த காளி அம்மாவின் திருக்கோயில், இதன் அமைப்பு ஏறக்குறைய மற்ற வடஇந்திய கோயிலிகளை ஒத்திருக்கும். இங்கிருந்து ஆற்றை படகில் கடந்து சென்றால் (படகு சத்தம் ஆறு ரூபாய்) பேலூர் மடத்தை அடையலாம். இது இராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தர் அவர்களின் தலைமை மடம், இதன் சிறப்பு அம்சம் அமைதி தவளும் தியான மண்டபம். கடவுள் நம்பிக்கை இல்லாவிடினும் ஹூக்ளி ஆற்றில் படகில் மிதந்து கொண்டு பௌர்ணமி நிலவின் ஒளியில் காளி கோயில் படித்துறை மற்றும் அதன் பின்னனியில் ஜொலிக்கும் கோபுரமும் மனதில் ஒரு இனிய வருடல்.
படகு சவாரி
பேலூர் மடம்

நீங்கள் செல்லும் பொழுது கண்டிப்பாக சாப்பிட வேண்டியது எலிஷ் மீன், குலாப் ஜாமூன், மிஷ்டி தோஹி, சந்தேஸ்