Tuesday, July 12, 2011

தமிழை கணினியால் மேம்படுத்துவோம்




சுபாஷினி பேட்டி

தமிழ் மரபு அறக்கட்டளை எந்த சூழலில் துவங்கினீர்கள்? மரபுப்பணியில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?

       தமிழ் சமூக, பாரம்பரிய வரலாற்று ஆவணங்களை இணையத்தில் மின்பதிப்பாக்கி அதன் அசல் கெடாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று தொடங்கிய ஒரு முயற்சி இது. ஐரோப்பிய சூழலில் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் வழிமுறைகளை நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த போது அவ்வகையில் தமிழ் வரலாற்று ஆவணங்களும் மின்பதிப்பாக்கம் கண்டு பொதுமக்கள் பார்வைக்கும் வாசிப்பிற்கும் பயன்படும் வகையில் முயற்சிக்க வேண்டும் என்று இந்தக் கருத்தினை உருவாக்கினோம். மிகப் பெரிய கனவு இது என்றே சொல்ல வேண்டும். தமிழர் வரலாற்றினை உள்ளடக்கிய வாழ்வியல், கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், மெய்ஞானம் சரித்திரம் ஆகிய எல்லா அங்கங்களையும் எவையெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அவை அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ரீதியில் இந்த  முயற்சியைத் தொடங்கினோம். ஐரோப்பிய சூழலில் ஆவணப் பாதுகாப்பு என்பது தொழில் நுட்ப வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு மிகத் துரிதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அசல் எவ்வாறு தூய்மையாக பாதுகாப்பாகப் பாதுகாக்கப்படுகின்றதோ அவ்வாறே மின்பதிப்பு செய்யப்பட்ட ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப்படுவதும் அச்சுப் பதிப்பு காண்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது ஆரோக்கியமான ஒரு பணி. தமிழகச் சூழலில் நம் தமிழர் பாரம்பரியச் சான்றாக விளங்கும் ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இன்னமும் முழுமையாக மின்பதிப்பு செய்யப்பட்டு பொது மக்களுக்குக் கிடைக்கும் வண்ணம் வகை செய்யப்படாமலேயே இருக்கின்ற சூழலைக் காண்கின்றோம். தொல்பொருள், சுவடியியல் ஆவணவியல் துறை அறிஞர்கள் சிலரது அயராத உழைப்பின் பலனாக தற்சமயம் பல நூல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் இவை போதாது. இன்னமும் தனியார் வசமுள்ள பல ஓலைச் சுவடிகள் அதன் உள்ளடக்கம் அறியப்படாமல் வாசிப்பாரற்று பெட்டிகளில் முடங்கிக் கிடக்கின்றன. பல ஆலயங்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாப்பின்றியும் வாசித்து படியெடுக்கப்படாமலுல் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் கல்வெட்டுக்கள் உள்ளன. தனியார் பலரிடம் செப்பேடுகள் இருக்கின்றன. இவ்வைகையான சரித்திர ஆவணங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆராயப்படும் போது மென்மேலும் புதிய செய்திகள் நம் வரலாறு பற்றி கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இவ்வகையான சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். பொது மக்களும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களாக மாற வேண்டும் என்ற நோக்கில் அவர்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழ் மரபு அறக்கட்டளை என்ற இந்த முயற்சி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட 2001ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வந்து இங்கு களப்பணிகளில் ஈடுபடுவடுதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றேன். 10 ஆண்டுகள் நிரைவுற்று 11ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம். அந்த வகையில் தமிழகத்திலும் மற்ற பல இடங்களிலும் பல்வேறு தமிழ் ஆவணங்கள் மின்படிப்பு பற்றிய விழிப்புணர்ச்சி கருத்தரங்களையும் சந்திப்புக்களையும் இவ்வாண்டு நடத்தி வருகின்றோம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் முக்கிய பணிகளை விளக்கவும்.

      தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக பழந்தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் ஆகியவற்றை மின்பதிப்பு செய்வது எங்கள் பணிகளில் முக்கியமான ஒன்று. பல நூல்கள் வெளியிடப்பட்டு மறுபதிப்பு காணாமலேயே மறைந்து விடுகின்றன. சில நூல்கள் மறுபதிப்பு கண்டாலும் அவையும் கூட மக்கி அதன் வாசிப்பு நிலையை இழந்து விடும் நிலை ஏற்படுகின்றது. இவ்வகையான நூல்களை கணினி தொழில் நுட்பத்தின் வழியாக மின்பதிப்பு செய்து அவற்றை இணையத்தில் இணைத்து வைக்கும் போது அது உலகின் எல்லா மூலைகளிலும் வாழும் மக்களுக்கும் வாசித்துப் பயன்பெற வாய்ப்பளிக்கின்றது. நினைவிலேயே இல்லாமல் மறைந்து போன இவ்வகையான பல நூற்களை தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தில் நாங்கள் மின்பதிப்பாக்கி சேகரித்து வைத்துள்ளோம். அடுத்து ஓலைச் சுவடிகள். இன்றைய நிலையில் பலர் நமது மூதாதையர் எழுதி வைத்த ஓலைகள் எல்லாம் கிடைத்து விட்டன. அவை நூலகங்களிலும், அருங்காட்சியகத்திலும் ஆய்வு நிறுவனங்களிலும் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்ற கருத்தில் உள்ளனர். இது தவறான கருத்து. இன்னமும் கூட வாசிக்கப்பட்டு ஆராயப்படாத பல ஓலைகள்  தனியார் வசம் உள்ளன. இவை சேகரிக்கப்பட்டு முறையாக ஆராயப்பட வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். இது தவிர்த்து ஆய்வகங்களிலும் நூலகங்களிலும் உள்ள ஓலைச்சுவடிகளும் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இவை தவிர நாம் நாட்டுப்புறவியல், வாழ்வியல், வட்டார வழக்குகள் தொடர்பான தகவல்களை மின்பதிவு செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். நமது பணிகளின் வாயிலாக பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இலவசமாக பொது மக்களின் வாசிப்பிற்கு வழங்குகின்றோம். எங்களின் பிரதான வலைத்தளமான  http://www.tamilheritage.org/ இவ்வைகையான தகவல்களை கட்டுரை வடிவத்திலும், கேட்டு புரிந்து கொள்ளும் வகையில் ஒலிப்பதிவுகளாகவும், பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் விழியப் பதிவுகளாகவும் வழங்குகின்றோம். அத்துடன் பல்வேறு கட்டுரை தொகுப்பு மையமாக விக்கி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி http://www.heritagewiki.org/ என்ற மரபு விக்கி பகுதியையும் உறுவாக்கியுள்ளோம். இதில் தற்சமயம் ஏறக்குறைய 850 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் தமிழர் பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கும் வகையில் பதிவாக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர தமிழ் மரபு அறக்கட்டளை நான்கு வலைப்பூக்களைப் பராமரித்து வருகின்றோம். மரபு படங்களும் அதனை விளக்கும் செய்தியும் என்ற வகையில் மரபுப்படங்கள் வலைப்பக்கமும், ஒலிப்பதிவுகளின் மாதாந்திர வெளியீட்டிற்காக மண்ணின் குரல் என்னும் ஒரு வலைப்பூவும், விழியப் பதிவுகளின்(வீடியோ) பதிவிற்காக நிகழ்கலை என்னும் ஒரு வலைப்பூவும், மரபுச் செய்திகளுக்காக  செய்திகள் வலைப்பூவும் எங்களால் பராமரிக்கப்படுகின்றன.

தங்களுடைய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஒலைச் சுவடி திட்டத்தின் வெற்றி குறித்து பட்டியலிடவும்.

      2009ம் ஆண்டின் இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் ஓலைச் சுவடி தேடுதல் மற்றும் மின்னாக்கம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் அடிப்படையில் National manuscript Mission (NMM) வழங்கியிருந்த பட்டியலின் படி தமிழகத்தில் ஓலைச்சுவடி தேடுதல் பணி 2010ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதிநிதித்து இருவரும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சுவடிப்புலத்தைப் பிரதிநிதித்து ஒருவரும் இத்தேடுதல் பணியில் ஈடுபட்டோம். இத்தேடுதல் பணிகள் இரண்டு படி நிலைகளில் மேற்கொள்ளப்பட்டன. திரு.சுகுமாறன் அவர்களின் மேற்பார்வையில் முதல் படி நிலையில்  சென்னை, திருவள்ளூர், பழவேற்காடு, செங்கல்பட்டு, கொல்லிமலை,  ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், நாமக்கல், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் வழி ஏறக்குறைய 26,000 ஓலைகள் தனியாரிடமிருந்து சேகரிக்கப்பட்டு இவை தமிழ்ப் பலகலைக்கழகத்தில் பாதுகாப்பிற்காகவும் ஆய்வுக்காகவும் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட நடவடிக்கை செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் இறுதி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏறக்குறைய 59,000 ஓலைகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட ஓலைகள் பல்வேறு அளவில் அமைந்ததாகவும், பல்வேறு வடிவங்களில் அமைந்ததாகவும், பல்வேறு உள்ளடக்கம் கொண்டதாகவும் அமைந்துள்ளது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. பொதுவாக ஓலைச்சுவடி என்றாலே அது நாடி ஜோதிடம் அல்லது மருத்துவம் அல்லது இலக்கியம் என்று மட்டுமே பலர் கருதுகின்றனர். எங்கள் தேடுதலில் பல்தரப்பட்ட ஓலைகளை சேகரித்துள்ளோம். ஆழமான இலக்கியம் மட்டுமன்றி கதைகள், பாடல்கள் இவற்றோடு சித்த வைத்திய ஓலைகள், மாட்டு வைத்திய ஓலைகள், ஜோதிட ஓலைகள், பட்சி சாஸ்திரம், குடும்ப விஷயங்கள், கணக்குகள் எனப் பல விஷயங்களை உள்ளடக்கிய ஓலைகளை சேகரிக்க முடிந்தது. நாங்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்திய இந்த திட்டம் வெற்றிகரமாக நல்ல பலனை வழங்கியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். தமிழகமெங்கும் ஓலைகள் முழுமையாக தேடப்பட்டு அது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விட்டது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் தனியார் பலரிடம் ஓலைச்சுவடிகள் பெட்டிகளில் முடங்கிக்கிடக்கின்றன. அவை அவர்களால் முறையாகப் பாதுகாக்கப்பட்டாலும் கூட இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் வாசிப்பு நிலை இழந்து கெட்டு விடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மிகத் துரிதமாக இவை மின்னாக்கம் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் இருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆய்வு நிறுவனங்களில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஓலைகள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன் என்ற போதிலும் தனியாரிடம் பெரு வாரியாக இன்றளவும் உள்ள ஓலைகளின் நிலை கேள்விக்குறியான நிலையிலேயே உள்ளது. சிலர் இரும்புப்பெட்டியில் பல ஆண்டுகளாக திறக்காமலேயே பூட்டி வைத்திருக்கின்றனர். அவை பூச்சிக்களால் சேதம் செய்யப்பட்டு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலே இருப்பதும் உண்டு. சிலர் ஓலை பாதுகாப்பு முறை பற்றி தெரியாமல் அவற்றை தூய்மை செய்கின்றோம் என நினைத்து சோப்பு தேய்த்து கழுவி வெயிலில் உலர்த்தி காயவைத்து சேதப்படுத்து விடுகின்றனர். சிலர் பழைய துணி மூட்டைகளில் கட்டி எங்கோ ஓர் மூலையில் பத்திரப்படுத்தி வைப்பதாக நினைத்துக் கொண்டு அவைகளைச் சேதப்படுத்தி விடுகின்றனர். சிலர் தங்கள் குடிசைகளின் கூரைகளுக்கிடையே பதுக்கி வைத்திருக்கின்றனர். இவை மழை, கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு வாசிப்பு தான்மை இழந்து காணப்படுகின்றன. இவ்வகையில் நமது இலக்கிய வரலாற்றுச் செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருவதைக் காணும் போது அது மனதிற்கு பெரும் வேதனை அளிப்பதாகவே உள்ளது. இது விரைவில் களையப்பட வேண்டும். பொது மக்களும் உனர்ந்து தங்கள் வசமுள்ள ஓலைகள் முறையாக பாதுகாக்கப் படவும் மின்பதிப்பாக்கம் செய்யவும் ஒத்துழைக்க முன்வர வேண்டும். இப்படி சேகரிக்கப்படும் ஓலைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதிலுள்ள தகவல்கள் தற்காலத் தமிழில் எழுதப்படும் போது பல புதிய தகவல்கள் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சில வேலைகளில் ஒரே சுவடிகள் பல பாட பேதங்களுடன் கிடைப்பதுவும் உண்டு. இவையும் ஆராயப்பட வேண்டும்.     
 
தமிழ் மரபு அறக்கட்டளை கல்வெட்டியியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறதா?

     ஆம். கல்வெட்டியல் ஆய்வுகளின் வழி தமிழர் வரலாற்றுத் தகவல்கள் முறையாக் நமக்கு வழங்கப்படக் கூடிய பெரும் சாத்தியம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கல்வெட்டியியல் தொடர்பான பல தகவல்களை மின்பதிப்பாக்கி வருகின்றோம். அந்த வகையில் கட்டுரைகள், பேட்டிகளின் ஒலிக்கோப்புக்கள், வீடியோ பதிவுகள் என தகவல்கள் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டியியல் ஆய்வாளர்களின் ஆலோசனைகளை ஏற்று நமது பதிப்புக்கள் செம்மையுடன் பதிப்பிக்கப் படுகின்றன.மேலும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுத்தகவ்ல்களோடு இப்பகுதியை வளப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசையும் கூட.

உங்களுடைய் 'மின்தமிழ்' மின்னஞ்சல் குழுமத்தைப் பற்றி விளக்கவும்,

   யாவரும் இதில் உறுப்பினராகலாமா?
மின்தமிழ் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி அரங்கமாகவும் மடலாடற் குழுவாகவும் செயலாற்ற உருவாக்கப்பட்டது. முற்றிலும் இணையத்திலேயே (Internet)  இயங்கும் ஒரு தளம் இது. தமிழ் மொழி, மரபு, பாரம்பரியம், கலை, நாட்டுபுறவியல், வரலாறு ஆகிய விஷயங்களில் ஆர்வமுள்ள அனைவருமே இந்த மடலாடற்குழுவில் பங்கு பெறலாம். இதில் இணைந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. இணைய விரும்புபவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியைக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுக்குப் பின்னர் தங்கள் கருத்துக்களைப் பதியவும் பிறர் கருத்துக்களுக்குப் பின்னூட்டங்கள் சேர்க்கவும் முடியும். இதுவரை உலகளாவிய ரீதியில் 1300 உறுப்பினர்கள் இந்த மடலாடற்குழுவில் இணைந்துள்ளனர். உலகமெங்குமுள்ள தமிழ் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள், அறிஞர்கள் இந்த மடலாடர் குழுவில் இணைந்து இங்கு நிகழும் கருத்துப் பரிமாற்றங்களை மேலும் வளப்படுத்த வேண்டும் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் இலக்காகும்.

 

No comments:

Post a Comment