Sunday, January 22, 2012

கொல்கத்தா பயண அனுபவங்கள்


விமானத்தை விட்டு வெளியே வந்த போது என்னை வரவேற்றது சிமெண்ட் குடோன் போன்ற கொல்கத்தா விமான நிலையமும் நான் பணம் கட்டி முன்பதிவு செய்திருந்த கார் கம்பெனி அனுப்பி வைத்த பழைய ஓட்டை அம்பஸெடர் கார் மற்றும் வயதான ஒரு பெங்காலி மட்டுமே தெரிந்த டிரைவர். அவரிடம் எப்படியோ சைகை மொழியில் புரிய வைத்து ஹோட்டல் சென்று அடைந்தேன் (பின்னர் அவர்களிடம் சண்டை போட்ட பிறகு ஹிந்தி தெரிந்த டிரைவரும், இண்டிகாவும் அனுப்பி வைத்தது வேறு கதை, கார் கம்பெனிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம்).

ஒரு முறைக்கு மேல் கட்டிடம் மற்றும் கார் என எதற்கும் பெயிண்ட் அடிக்கும் பழக்கம் இந்த நகரில் இல்லை போலும், இதனால் மொத்த நகரமே பழையது போல் காட்சி அளிக்கிறது. இங்கு அம்பஸெடர் கார் எண்ணிக்கையில் மிக அதிகம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மிகவும் குறைவு, இதற்கு கட்டுபாடின்றி எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம் என்ற காரோட்டிகளின் கொள்கையினால் ஏற்பட்ட உயிர் பயம் காரணமாக இருக்கலாம்.

என்றோ வழக்கொழிந்த சைக்கிள் ரிக்ஷா, கை ரிக்ஷா மற்றும் டிராம் புழக்கம் இந்த நகரை மேலும் பழமையாக காட்டுகிறது. இதற்கு மேல் ஒடுக்கு விழ முடியாத தகர டப்பா போன்ற பஸ், மஞ்சள் நிற அம்பஸெடர் டாக்ஸி, பஸ் நுழையாத இடங்களுக்கு ஷேர் ஆட்டோ இவை இந்த நகரத்தின் அடையாளம். (இங்கு டாக்ஸியில் கண்டிப்பாக மீட்டர் போடுவார்கள், இப்போதைய நிலவரப்படி மீட்டர் X 2 + 2 என்று கணக்கு போட்டு பணம் கொடுக்க வேண்டும். அதாவது மீட்டரில் பத்து ரூபாய் காட்டினால் 10 X 2 + 2 = 22 ரூபாய் கொடுக்க வேண்டும்) ஷேர் ஆட்டோ பக்கமே செல்ல வேண்டாம் பத்து ரூபாய் வாங்கி கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையில் இறக்கி விடுவர். பஸ் மற்றும் ஆட்டோவில் செல்ல வழி கேட்க பெங்காலி தெரிந்திருப்பது அவசியம்.

இனி இங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி

VICTORIA MEMORIAL
ஆங்கிலேய ஆட்சியின் போது இராணியின் நினைவாக எழுப்பபட்ட பளிங்கு மண்டபம் இப்பொழுது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் பிரம்மாண்ட கூரை, சுவர் ஓவியங்கள், கட்டிட அமைப்பு ஆங்கிலேய கட்டிட வல்லமையைப் பறைசாற்றுகிறது. இதில் உள்ள ஓவியங்கள் மற்றும் புகைபடங்கள் மூலம் இந்த நகரத்தின் வரலாற்றை அறியலாம் (கொல்கத்தா ஒரு காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது என்பது பலருக்கு ஆச்சர்ய செய்தியாக இருக்கும்). இங்கு ஒரு மோதிரத்தின் உள்ளே நுழைந்து வெளியே வரும் அளவு மெல்லிய மஸ்லின் புடவை காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. போர்வாட்கள், உடைகள், பீரங்கி என பல அறிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல பொருட்கள் சரியான கவனிப்பு இன்றி துரு பிடிக்க துவங்கி உள்ளது வேதனையாக இருந்தது. இது கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடம்.

BIRLA MANDIR
பிர்லா மந்திர்
 வெள்ளை பளிங்கு கொண்டு கட்டப்பட்ட கோயில், ஹைதராபாத்தில் உள்ள பிர்லா மந்திரின் அமைப்பில் உள்ளது. இரவு நேரத்தில் விளக்குகளுடன் ஜொலிக்கும் கோபுரம் மிக ரம்மியமான காட்சி. இங்கு சிலைகள் அனைத்தும் வெள்ளை பளிங்கினால் செய்யப்பட்டது. (கண்டிப்பாக கற்பூரம் ஏற்ற அனுமதி இல்லை). இங்கு திருமாளின் அனைத்து அவதாரங்களும் சிலை வடிவில் உள்ளது. கொல்கத்தாவில் சுற்றுசூளல் எவ்வளவு மாசுபட்டு உள்ளது என்பதற்கு இந்த கட்டிடத்தின் தற்போதைய நிறம் ஒரு உதாரணம்.

GREAT BANYAN TREE
இது INDIAN BOTANIC GARDEN என்ற மிக பறந்து விரிந்த தாவர பூங்காவின் மத்தியில் உள்ளது. இது 250 வருடங்களுக்கு முன்பு முளைத்தது, இன்று கின்னஸில் இடம் பெரும் அளவு 1.5 ஹெக்டேர் பரப்பிற்க்கு வளர்ந்துள்ளது, கீழே விழும் விழுதுகள் வேரூன்றி தொடர் மரமாக மாறிய அதிசயத்தை காணலாம். ( இங்கு பார்பதற்க்கு மரத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை நேரம் இல்லாவிடில் தவிர்க்கலாம்)

HOWRAH BRIDGE
பல சினிமாக்களில் பார்த்த ஹவுரா ப்ரிட்ஜ், இது ஒரு போல்ட் கூட உபயோகபடுத்தாமல் உருக்கி ஒன்று சேர்த்து கட்டப்பட்டது. இது சுற்றுலா தளம் இல்லை, பார்பதற்க்கு ஒன்றும் இல்லை, வேண்டுமானால் ஹவுரா ப்ரிட்ஜ் பார்த்தேன் என சொல்லி கொள்ளலாம்.

GARIA HATT
இது சாலை நடைபாதை கடைகளுக்கு பிரசித்தி பெற்ற ஒரு இடம். நடைபாதை கடைகள் தானே என எண்ண வேண்டாம் நல்ல தரமான பொருட்களும் கிடைக்கும் கொஞ்சம் பேரம் பேச வேண்டும் (பெங்காலி மொழியில் கிச்சு கொம் கரோ என்றால் கொஞ்சம் கம்மி செய்யுங்கள் என்று பொருள்). இங்கு நான் வாங்கிய பொருட்களின் மொத்த மதிப்பு 6500. கைவேலைபாடுகள் கொண்ட அழகான, தரமான நியாய விலைக்கு பெங்காளி புடவை வாங்க இங்கு உள்ள Traders Assembly Mega Shop (208/7, Rashbehari Avenue) கடைக்கு செல்லலாம் (ஆனால் இந்த கடையில் பேரம் பேசக்கூடாது).

DAKSHINAPAN SHOPPING COMPLEX
இது GARIA HATT இல் கலை பொருட்கள், நுண்ணிய வேலைப்பாடு அமைந்த சிலைகள் மற்றும் உடைகள் வாங்க சிறந்த இடம். இதன் சிறப்பு அம்சம் இங்கு உள்ளவை ஒவ்வொரு மாநில அரசு நடத்தும் கடைகள், இதில் அந்தந்த மாநிலத்தின் சிறந்த கலை பொருட்களை விற்கப்படுகின்றன ( தமிழக அரசு நடத்தும் மண் சிற்பங்கள் விற்கும் கடையும் உள்ளது ).

NEW MARKET
இது கிட்டதட்ட GARIA HATT போன்று நடைபாதை கடைகளுக்கு பிரசித்தி பெற்ற ஒரு இடம், ஆனால் இங்கு கடைக்காரர்கள் ஆங்கிலமும் பேசுவார்கள், இதற்க்கு மிக அருகில் உள்ள ஹிப்பி காலனி ஒரு முக்கிய காரணம்.

DAKINESHWAR KAALI TEMPLE & BELUR MATT
காளி கோயில்
கொல்கத்தா நகரின் மிகுந்த புகழ் வாய்ந்த காளி அம்மாவின் திருக்கோயில், இதன் அமைப்பு ஏறக்குறைய மற்ற வடஇந்திய கோயிலிகளை ஒத்திருக்கும். இங்கிருந்து ஆற்றை படகில் கடந்து சென்றால் (படகு சத்தம் ஆறு ரூபாய்) பேலூர் மடத்தை அடையலாம். இது இராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தர் அவர்களின் தலைமை மடம், இதன் சிறப்பு அம்சம் அமைதி தவளும் தியான மண்டபம். கடவுள் நம்பிக்கை இல்லாவிடினும் ஹூக்ளி ஆற்றில் படகில் மிதந்து கொண்டு பௌர்ணமி நிலவின் ஒளியில் காளி கோயில் படித்துறை மற்றும் அதன் பின்னனியில் ஜொலிக்கும் கோபுரமும் மனதில் ஒரு இனிய வருடல்.
படகு சவாரி
பேலூர் மடம்

நீங்கள் செல்லும் பொழுது கண்டிப்பாக சாப்பிட வேண்டியது எலிஷ் மீன், குலாப் ஜாமூன், மிஷ்டி தோஹி, சந்தேஸ்

Monday, August 22, 2011

காதலும் இதர வியாதிகளும்: Part I


இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, நான் சந்தித்த மனிதர்களின் சாரல் இதில் இருக்கலாம் ஆனால் இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதபடவில்லை.

 
எப்பவும் போல ஒரு கரண்ட் கட் வேளையில் மல்லாக்க படுத்து கொண்டு ஓடாத டி‌வியை வெறித்து பார்த்து கொண்டு இருந்தேன். என்னுடன் அறையை பகிர்ந்த நண்பன் (கேட்டு கொண்டதற்கிணங்க பெயர் நீக்கப்பட்டது) பக்கத்து கட்டிலில் படுத்து கொண்டு துணைக்கு அதே டிவியை வெறித்து கொண்டு இருந்தான். இன்றைக்கு என்று பார்த்து மூளை குறுகுறுவென வேலை செய்து தொலைத்து “சே ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தா இந்நேரம் எங்கயாச்சு போய் ஊரை சுத்திகிட்டு இருந்திருக்கலாம்” என்று புலம்பினான். எனது ஜாதகத்தில் உச்சத்தில் இருந்த சனி பகவான் அவன் நாவில் வந்து அமர்த்து கொண்டதை நான் அறியவில்லை.

முந்தய இரவு முழுவதும் அவன் சொன்னதை பற்றி யோசித்து கொண்டு இருந்த காரணத்தாலும் எனது ஜாதக கட்டங்கள் உந்தி தள்ளிய காரணத்தாலும் நேராக ஆபிஸ் ஜாக் ராஜூவின் முன்னாள் போய் நின்றேன். ராஜூவை பற்றிய ஒரு முன்கதை சுருக்கம் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும், என்னை போன்ற பேக்குகளுக்கு பெண்கள் விஷயத்தில் ஐடியா கொடுப்பதற்காகவே அவதரித்த ஆபத்பாந்தவன். பான் பராக் போட்டு துப்பிய எச்சில் நிறத்தில் தலைச்சாயம், பகுட்டில் பல்லி வால் போன்ற மெல்லிய தாடி, ஒற்றை நாடி உருவம், நல்ல சிகப்பு, தமிழ் சினிமாவில் ஹீரோவின் தங்கையை காதலித்து  கரெக்ட் செய்யும் வில்லனின் தம்பி கேரக்டர் போல இருப்பான். ரொம்ப நாளாக ஆபிஸ் வேலை எதையும் செய்யாமல் சினிமா சான்ஸ் தேடி கொண்டு இருப்பவன், தாய்மார்கள் அனைவருக்கும் முன்பே அறிமுகமானவன், “டூ விட்ட தங்கச்சி” சீரியலில் கடந்த பத்து வாரங்களாக ஹீரோவின் தங்கையை இழுத்து கொண்டு ஓடிக்கொண்டிருப்பது சாட்சாத் நம்ம ராஜு தான். அவனை அழைத்து சென்று டீ வாங்கி கொடுத்து எனது பிரச்சனையை விளக்கினேன்.

ராஜூவின் யோசனையை எல்லோரும் நாடி போக காரணம் அவனது தெளிவான அணுகுமுறை. எந்த அளவு தெளிவு என்றால், எந்த ஒரு விஷயத்தையும் ஒரு கணித கேள்வியை தீர்வு செய்வது போன்று சமன்பாடுகளுடன் விளக்குவான்.

ஒரு சின்ன காகிதத்தில் எனது வாழ்க்கை பாதையை 12B படத்தில் வருவது போல பின்வருமாறு விவரித்தான்.

IDEA I
            நீ         +    உஷா = கனவில் கூட நடக்காது
    (ஹைட் கம்மி,     (அரேபிய குதிரை
      வீக் பாடி,              போன்ற உடல்வாகு,
    மாநிறம், சுமார்)   சுண்டினால் சிவக்கும் நிறம்)


இவன் எனது நண்பன் தானா என்ற யோசனை வந்தது அதற்க்குள் என்னை பேச விடாமல் அடுத்த யோசனைக்கு தாவிவிட்டான்.

IDEA II
           நீ         +    ஆர்த்தி      +   X  = நடக்கலாம்
     (ஹைட் கம்மி,    (வசீகரமான கண்கள்
      வீக் பாடி,               லட்சணமான முகம்,
     மாநிறம், சுமார்)     சிகப்பு)


இதில் X  ஒரு CATALYST அதன் முழு விவரம் இந்த பதிவில் அடங்காத காரணத்தால் முக்கிய புள்ளிகள் மட்டும் கீழ்வருமாறு

1.)     ஆறு மாத கடுமையான உடற்பயிற்சி
2.)     தெலுங்கு பட நாயகன் போல அடிக்கும் நிறத்தில் உடைகள்
3.)     SANTRO அல்லது I10
4.)     கூர்முனை தலைமயிர்(spike)

அவனிடம் நான் ஒரு பிறவி சோம்பேறி என்பதையும் எனது நிறத்திற்க்கு சிகப்பு சட்டை மற்றும் spike பொருத்தமாக இராது என்பதை மிக பொறுமையாக விளக்கி அடுத்த ஆலோசனைக்கு செல்லுமாறு கூறினேன்.

IDEA III
           நீ         +    வாணி         = உடனே காதல்
     (ஹைட் கம்மி,    (நவ நாகரீக உடை,
      வீக் பாடி,              ஒற்றைநாடி உருவம்,
     மாநிறம், சுமார்)   மாநிறம், சுமார்)

நான் தயக்கத்தோடு யோசிப்பதை பார்த்துவிட்டு மீண்டும் எனது குறைகளை அடுக்கி நீண்ட பட்டியல் போட்டு என்னை கடுப்பேற்றினான். நான் முறைப்பதை பார்த்துவிட்டு நிலவரத்தை விளக்கினான், வாணி தற்சமயம் அவளது முந்தய பாய் ஃப்ரெண்ட் உடன் இருந்து பிரிந்து விட்டதால் வேறு யாரும் முந்தி கொள்வதற்க்கு முன்னாள் நான் களமிறங்கும் அவசியத்தை எடுத்து கூறியதோடு அன்றி என்னை தரதரவென இழுத்து சென்று அவளிடம் அறிமுகம் செய்தான். அவளும் ரொம்ப நாள் பழகியது போல சகஜமாக காபி சாப்பிட அழைத்தாள், நானும் பின்னால் வரும் இடியாப்ப சிக்கல்களை உணராமல் கிளம்பினேன்.

                                                       - தொடரும் 

Wednesday, August 10, 2011

தூக்கத்தில் தேடுகிறேன்



உளறல் போல இருந்தது !!


கனவுகள் இல்லா பின்னிரவில்
எதுவும் நிகழவில்லை

எனக்குள் நான் பேசிய ஒலியில்
விழிக்கிறேன்

உளறல் போல இருந்தது

வருடமொன்று  ஆகியும்
வலியினுள்ளே தொட்ட
விரலில் ஈரம்

தெரிந்த இடத்தில்
தொலைந்த நண்பன்

கால்புதையும் கடற்கரையில்
கரைந்த கனவுகள்

பாதி கண்களை மூடி யோசித்தேன்

விண்மீன் பக்க காற்றில்
சுவாசம் எப்படி ?

கேட்டிராத வான்மொழி கேள்விகளின்
நிழலில் ஒளிந்திருக்கலாமோ ?

சாய்ந்த மரமொன்றின் சருகுகள்
மீது நடந்தேன்

தள்ளி கேட்கும் காலடித்தடத்தின்
எதிரொலியாக இருக்குமோ ?

அருவமான அழகிகளின் முடிவில்லா
முத்தங்களிலா ?

தெரியாத இடைவெளி உந்தி
தள்ளி விட்டது

உள்ளுயிற்புடன் திரும்பி நடந்தேன்
கால்தட்டியது வாழ்க்கை

விதிர்த்து வீழ்ந்து கண்விழித்தேன்

காலநேரமின்றி கதையடிக்க பக்கத்தில்
இடம் போட்டு வைத்திருப்பான்

தள்ளி செல்லுங்கள் திரும்ப தூக்கத்தில்
தேடி பார்க்க வேண்டும்

உயிரினிசை ஒலிக்கும் வரை
தேடல் தொடரும் ...

                                   -  சிவா

Tuesday, August 9, 2011

Devil's English -Tamil Dictionary - Alphabet B

BABY
(நபருக்கு நபர் மாறுபடும்)  சர்வ ஜாக்கிரதையாக கையாள வேண்டிய கொடிய மிருகம், நமது மனதை படித்து பின்னர் அதை நமக்கு எதிராக பயன்படுத்த வல்லது, சதா ஓலமிட்டு தூக்கத்தை கெடுக்கும் ஜந்து, யாராவது தூக்கும் வரை காத்திருந்து அவர்கள் மேல் சிறுநீர் கழிக்கும் துஷ்டன்/துஷ்டி, ஆதாரம், விபத்து.
BACHELOR
வாடகைக்கு வீடு கிடைக்காத அப்பாவிகள்.
BANKRUPT
மனைவியின் வங்கி கணக்கில் சேமிப்பு/இருப்பு செய்யும் பெண்ணுரிமை போற்றும் புரட்சி சிந்தனை கொண்டவர்.
BAR
புதிய சிந்தனைகள் உருவாகும் உலை களம், வாள்கள் தீட்டப்படும் பட்டறை, சமுதாயத்தை வழி நடத்தும் சமச்சீர் கல்விசாலை
BARTENDER
நேரம் ஆகிறது வீட்டுக்கு போங்க என்று அக்கறையோடு சொல்லும் நண்பர்.
BATH
நாம் செய்யாதது
BATHROOM
நமக்கு தேவையில்லாதது
BEAUTY PARLOUR
வாழ்க்கை முழுவதும் முயன்றும் மாற்ற முடியாத முகத்தை மூன்று மாத பயிற்சி முடித்தவரிடம் மாற்ற சொல்லி ஒப்படைக்கும் இடம்
BELT
தொப்பையை பிதுக்கி மலச்சிக்கல் போக்கும் கட்டு, புனிதமான மாடுகளின் தோலில் தயாரிக்கப்படுவது, இதை மிக அழுத்தமாக அணிந்திருப்பவரின் பின்னால் நிற்பதை தவிர்க்கவும் மிக வேகமாக காற்றை பிரிக்கும் வல்லமை கொண்டவர்கள்.
BEER
இன்றய இளைஞர்களின் இளந்தொந்தி இரகசியம்.
BEGGAR
புரட்சிகரமான பொருளாதார கொள்கையால் பணமுறை சுதந்திரம் அடைந்தவர்
BIGAMIST
திரும்ப திரும்ப அதே தப்பை செய்யும் முட்டாள்
BLACKGUARD
கருப்பான செக்யூரிட்டி
BORE/BLADE
இவ்வளவு கஷ்டப்பட்டு உசுர குடுத்து பதிவு போடுற நான்தான் ஸார்
BRAIN
நமக்கு இல்லாதது
BRIDE
ஆட்டை வெட்டுபவர் அல்லது புதிதாக அடிமை வாங்கியவர்.
BRIDEGROOM
பலிகடா அல்லது அடிமை சந்தையில் விற்கபடும் நபர்.
BROKER
நம்மிடம் பணம் பெற்று கொண்டு நம் வாழ்வை நாசமாக்கும் மோசதாரி, இப்பத்த ரேட் வரதட்சணையில் 10% , நீங்க வரதட்சணை வாங்கவில்லை என்றால் உங்களுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாண பிராப்தம் இல்லை
BUDGET
நாம் கடன் வாங்கியவர் முகவரி மற்றும் அவர்களிடம் மாட்டி கொள்ளாமல் பயணம் செய்ய வழிகாட்டும் வரைபடம்.
BUFFET
ஃபுல் மீல்ஸ் அல்லது அன்லிமிடெட் மீல்ஸ்
BUSY
(நபருக்கு நபர் மாறுபடும்) முதலாளி வரும் பொழுது தொழிலாளி இந்த நிலையில் இருப்பார், சாக்கு, இளுத்தடிப்பது, தொடங்கிய வேலையை முடிக்க முடியாமல் முழிக்கும் கையாலாகாத்தனம்.
BUSINESS
மேற்கூறிய தொழிலாளியை வைத்து வேலை வாங்கி நாசமாய் போக விந்தையான ஒரு யுக்தி.